யானைகவுனி பாலம் அருகே பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரியும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் ரயில்வே காவலர் குடியிருப்பு வாசிகள் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைச் சிறைபிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யானைகவுனி பாலத்தின் கீழே சென்னை குடிநீர்வாரியத்தின் நீரேற்று நிலையமும், அதனை ஒட்டி ரயில்வே காவலர் குடியிருப்பும் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்திற்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வந்து செல்கின்றன.

குண்டும் குழியுமான சாலை: மக்கள் அவதி
இத்தகைய தொடர்ச்சியான கனரக வாகனப் போக்குவரத்தால் இப்பகுதியில் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையால் சாலையில் தேங்கும் மழைநீரால் நடந்து கூடச் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் ரயில்வே காவலர் குடியிருப்பில் வசிப்பவர்கள் வெளியில் வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குப் பலமுறை புகார்கள் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குடியிருப்பு வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திடீர் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தை
நேற்று மாலை பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆத்திரமடைந்த ரயில்வே காவலர் குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்கள் திடீரெனப் போராட்டத்தில் குதித்தனர். அப்பகுதியில் வந்து சென்ற 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளைச் சிறைபிடித்து முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெரியமேடு காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சேதமடைந்த சாலையை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சென்னையில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு: தவிப்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்!
