தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) விவகாரம், மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து எம்பிக்கள் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ளன. இது மாநில அரசியலில் கட்சிகளுக்கு இடையே மறைமுகமாக அரங்கேறிவரும் அதிகாரப் போட்டி மற்றும் சமரச அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
திசைதிருப்பல் நாடகமா? வியூக அரசியலா?
காவிரி மேகதாது விவகாரம், வறண்டு கிடக்கும் டெல்டா மாவட்டங்கள், கண்ணீரில் தவிக்கும் விவசாயிகள் என மக்கள் மன்றத்தின் கண்முன்னே பல முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கிடக்கின்றன. இவற்றை விடுத்து, மத்திய அரசின் தொகுதி மறுவரையறை விவகாரத்தை மையப்படுத்தி தவெக இந்த எம்பிக்கள் கூட்டத்தைக் கூட்டியிருப்பது எதற்காக? எதிர்க்கட்சிகள் கூறுவது போல, இது பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு அரசியல் நாடகமா என்ற கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.

பாஜக எதிர்ப்பில் கைமாறும் ‘காப்புரிமை’!
இதுவரை தமிழக அரசியலில் ‘பாஜக எதிர்ப்பின் ஒற்றைக் குத்தகைதாரராக’ தன்னை முன்னிறுத்தி வந்த திமுகவுக்கு, தவெகவின் இந்த அதிரடி நகர்வு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் அண்ணா திமுகவை பலவீனப்படுத்த திமுக கையில் எடுத்த அதே ‘டெல்லி vs தமிழ்நாடு’ என்ற கருத்தியல் ஆயுதத்தை, இன்று தவெக மிகச் சரியாகத் தன் பக்கம் திருப்பி ஆட்டம் காண வைத்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தவெகவும் பாஜக எதிர்ப்பில் முழுமையான ஆக்ரோஷத்தைக் காட்டாமல், ஒரு மௌன சமரசப் புள்ளியில்தான் பயணிக்கிறதா என்ற கேள்வி வலுக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் கூட தவெக களத்தில் இறங்காமல் வேடிக்கை பார்ப்பது, அதன் அரசியல் நிலைப்பாட்டின் மீதான நம்பகத்தன்மையைச் கேள்விக்குள்ளாக்குகிறது.

அரசியல் களத்தில் சந்தர்ப்பவாத முகமூடிகள்!
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளின் நிலைப்பாடு மீண்டும் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தேர்தலுக்கு ஒரு கூட்டணி, பதவிக்கு ஒரு கூட்டணி என்ற கணக்குப் போடும் கட்சிகள், தமிழகத்தின் உண்மையான நலனுக்காகக் குரல் கொடுக்கிறதா அல்லது அதிகாரப் பகிர்வுக்கான காய் நகர்த்தல்களில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தவெக நடத்திய இந்தக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்றிருப்பது, எதிர்காலக் கூட்டணி கணக்குகளுக்கான அடிக்கல்லாகவே பார்க்கப்படுகிறது.
சமூக வலைதள அரசியலா, நேரடி களப்பணியா?
இன்ஸ்டாகிராம் ரீல்ஸும், சமூக வலைதளப் பதிவுகளும் இன்றைய இளைஞர்களை எளிதில் ஈர்க்கலாம்; ஆனால், அது மட்டுமே ஒரு பலமான கட்சியை உருவாக்குமா என்றால் கேள்விக்குறிதான். 75 ஆண்டு கால அரசியல் பாரம்பரியம் கொண்ட திமுகவையும், அடிமட்டக் கட்டமைப்பு கொண்ட அதிமுகவையும் வெறும் டிஜிட்டல் தளங்களை மட்டும் வைத்து வீழ்த்திவிட முடியாது.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக தவெக எடுக்கும் நிலைப்பாடுதான் எதிர்காலத்தில் அதன் பலத்தை நிர்ணயிக்கும் என்று எதிர்ப்பாகப்படுகிறது. மேலும், யார் யாரை ஓவர்டேக் செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, இந்த அரசியல் சதுரங்கத்தில் எஜமானர்களாக மாறப்போவது யார் என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்!
