மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து திட்டமிட்டு நீக்குவதாகவும், ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்குப் பணிந்து மெட்டா (Meta) போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 
குறிப்பாக, டெல்லி போராட்டங்கள் மற்றும் சிஜேபி (CJP) தொடர்பான பல மில்லியன் பார்வைகளைப் பெற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் இருந்து முடக்கப்படுவது தற்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் அழுத்தமும் அல்காரிதம் தணிக்கையும்!
மத்திய அரசுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் கருத்துகளை நீக்குவதற்கும், சில முக்கியக் கணக்குகளை முடக்குவதற்கும் அரசு நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இது குறித்துப் பேசிய அரசியல் விமர்சகர் நாதன், “டெல்லி மாணவர் போராட்டங்கள் தொடர்பான முக்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. பிரதமரின் வீடியோ ஒன்று தவறுதலாக நீக்கப்பட்டபோது மன்னிப்பு கோரிய மெட்டா நிறுவனம், அரசுக்கு எதிரான கருத்துகள் முடக்கப்படும்போது மௌனம் காக்கிறது. ‘அல்காரிதம்’ நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசுக்கு எதிரான கருத்துகளைத் தேடிக் கண்டுபிடித்து முடக்குவது அல்லது அந்தப் பதிவுகள் பிறரின் பார்வைக்குச் செல்லாமல் ‘ஷேடோ பேன்’ (Shadow ban) செய்வது போன்ற செயல்களில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஐடி சட்டத்தை வைத்து மிரட்டலா?
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி (IT Act), சமூக வலைதள நிறுவனங்கள் செய்தியைப் பகிர்ந்தளிக்கும் இடைத்தரகர்களாகவே (Intermediaries) சட்டப்பூர்வமாகக் கருதப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்தச் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி நிறுவனங்களை அச்சுறுத்துவதாகவும், தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது. ஒருபக்கம் முக்கிய ஊடகங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் நிலையில், மறுபக்கம் சமூக வலைதளங்களையும் கட்டுப்படுத்துவது ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்றும் நாதன் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் ஒரு நீதி, இந்தியாவில் வேறொன்றா?
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மெட்டா நிறுவனம் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ஏகபோக நடவடிக்கைகளுக்காகப் பெரும் அபராதங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் இத்தகைய விதிமீறல்களைத் தடையின்றிச் செய்வதற்கும், ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப இயங்குவதற்கும் இந்தியச் சந்தையை இழந்துவிடக் கூடாது என்ற அந்நிறுவனத்தின் வணிக அச்சமே காரணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களுக்கு மாற்று நெட்வொர்க் அழைப்பு
அரசின் இந்தத் தணிக்கை நடவடிக்கைகளை எதிர்கொள்ள, சமூக வலைதள நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்காமல், மக்கள் நேரடியாக ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் மாற்று நெட்வொர்க்குகளை இளைஞர்களும் மாணவர்களும் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. சமூக வலைதளங்கள் மீதான அரசின் இத்தகைய பயமும் கட்டுப்பாடும் எதிர்காலத்தில் ஜனநாயகத்திற்குக் சவாலாக அமையும் என்றும், அதிகாரத்தைத் தக்கவைக்க மேற்கொள்ளப்படும் இதுபோன்ற தணிக்கை நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்குப் பலன் தராது என்றும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
