கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், காவல்துறை உண்மையை மறைத்துத் திரித்துப் பேசுவதாகவும், இது கோஷ்டி மோதல் அல்ல; திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் உயிரிழந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் கொந்தளிப்புடன் குற்றம்சாட்டியுள்ளனர்.
கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவன் அமுதனின் தந்தை கென்னடி பேசுகையில், “என் மகன் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உண்மையை மறைத்துத் திரித்துப் பேசுகின்றனர். கஞ்சா விற்பனை குறித்து அமுதன் காவல்துறைக்குத் தகவல் அளித்ததால், தங்களது சட்டவிரோத வியாபாரம் பாதிக்கப்படும் என்ற ஆத்திரத்திலேயே கஞ்சா கும்பல் திட்டமிட்டு என் மகனைப் படுகொலை செய்துள்ளது.” எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

“20 பேர் சேர்ந்து அடித்தால் அது கோஷ்டி மோதலா?” – தாய் கேள்வி
மாணவனின் தாய் சுமதி செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசுகையில், “ஒரு தனி நபர் மீது 20 பேர் கொண்ட கும்பல் பாய்ந்து அடித்துக் கொன்றால், அதை எப்படி கோஷ்டி மோதல் எனக் கூற முடியும்? இது முழுக்க முழுக்க திட்டமிட்ட படுகொலை. இச்சம்பவத்தில் தொடர்புடைய 20 பேரையும் உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.” எனக் கோரிக்கை விடுத்தார்.
அமைச்சரின் விளக்கத்திற்கு உறவினர்கள் எதிர்ப்பு
இச்சம்பவம் குறித்து உயர்கல்வித்துறை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர் விளக்கம் அளிக்காமல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எதற்காக விளக்கம் அளித்தார் என்று உயிரிழந்த அமுதனின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோவை கல்லூரி மாணவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை எந்தவிதப் பக்கச்சார்புமின்றி விசாரணை நடத்தி, இதில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முழக்கமாக உள்ளது.
