தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பில் மிகவும் குறைவான காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தேர்வர்களும் போட்டித் தேர்வுப் பயிற்சி மைய நிறுவனர்களும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
821 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி சார்பில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர் (தொகுதி-2), ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு குரூப்-2 பணியிடங்களுக்கும்; பால்வளத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூத்த ஆய்வாளர், ஆடிட் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப்-2ஏ பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 821 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பணியிடங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த தேர்வர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளில் இல்லாத சரிவு – பயிற்சி மைய உரிமையாளர் சாடல்
இது குறித்துத் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் நடராஜ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை வெறும் 26 குரூப்-1 பணியிடங்களே அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குரூப்-2 அறிவிப்பிலும் வெறும் 821 இடங்கள் மட்டுமே உள்ளன. கடந்த 2022-ல் 6,641 இடங்களும், 2024-ல் 2,540 இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தற்போது இந்த அளவுக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. மாநிலத்தில் சுமார் 6 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள சூழலில், அவற்றில் பெரும்பாலானவை குரூப்-2, 3 மற்றும் 4 பிரிவைச் சேர்ந்தவைதான். எனவே, ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 5,000 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப அரசு முன்வர வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 இடங்களை குறைந்தபட்சம் 1,500 ஆக உயர்த்த வேண்டும்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுட்சோர்சிங் நடைமுறைக்கு எதிர்ப்பு
மேலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவுட்சோர்சிங் (வெளிமுகமை) முறையில் ஆட்களை நியமிக்க மாட்டோம்” என மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் வாக்குறுதி அளித்த முதலமைச்சர் விஜய், தற்போது சட்டப்பேரவையில் அவுட்சோர்சிங் முறையைக் கொண்டுவர முனைவது, நம்பிக்கையுடன் வாக்களித்த இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
