மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, மின் வாரியம் நவம்பர் 15 ஆம் தேதி துவங்கியது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.5 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் உள்ளது. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். டிசம்பர் 1-க்குள் எவ்வளவு பேர் இணைத்துள்ளனர் என்பதை பொறுத்து அவகாசம் வழங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும். மின்வாரிய தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே போராட்டக் களத்திற்கு செல்வது சரியல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
