தமிழக முதல்வர் இன்று சென்னை வளாகத்தை பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள இந்த வளாகத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து உயர் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியே வந்த முதல்வர் விஜய், வழக்கமான கோட் அணியாமல் வெள்ளை சட்டையில் எளிமையான தோற்றத்தில் பேட்டரி காரில் பயணம் செய்தது அங்கிருந்த மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து, கோட்டை வளாகப் பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைக் காண திரண்டனர். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தலைமைச் செயலகத்திற்கு தொடர்ந்து வந்திருந்தாலும், முழு வளாகத்தையும் பார்வையிடும் வாய்ப்பு இதுவரை இல்லாததால், இன்று சிறப்பு ஏற்பாடாக பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்வை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, சென்னை கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள பழமையான தேவாலயத்தையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார். இதை அறிந்த தலைமைச் செயலக ஊழியர்கள் பலரும் அவரைக் காண ஆர்வத்துடன் குவிந்தனர். அதேபோல், பல்வேறு சொந்தப் பணிகளுக்காக தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் முதல்வரை நேரில் காண அவர் செல்லும் வழித்தடங்களில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டின் 40-க்கும் மேற்பட்ட துறைகளின் தலைமை அலுவலகங்கள் செயல்படும் மையமாக தலைமைச் செயலகம் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இங்கு தினசரி பணியாற்றி வருகின்றனர். மேலும், கோட்டை காவல் நிலையம், உணவகம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் வசதிக்காக பிரத்யேக ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் செயல்பட்டு வருகின்றன.
சுற்றுப்பார்வையின் போது, தலைமைச் செயலகத்தைச் சுற்றியிருந்த பழமையான அகழி மற்றும் அதில் ஒருகாலத்தில் முதலைகள் பாதுகாப்பு நோக்கில் வைக்கப்பட்டிருந்த வரலாறு குறித்தும், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய பகுதிகள் குறித்தும் அதிகாரிகள் முதல்வருக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
வீடு தேடி ரேஷன் திட்டம் தொடரும் – அமைச்சர் வெங்கடரமணன் உறுதி…
