தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அம்பேத்கரிய இயக்கம் இடம்பெற்றுள்ளது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம். இது சமூக நீதி மற்றும் அரசியல் சமத்துவத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விசிகதலைவர் திருமாவளவன் மிகுந்த நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
முதலில், நாடாளுமன்ற உறுப்பினராக சுயேட்சையாக வெற்றி பெற்ற சந்திரசேகர் ஆசாத்துக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பட்டியல் சமூக மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக தாங்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையை குறிப்பிடுகையில், விசிக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். மதச்சார்பற்ற அரசை உருவாக்கும் நோக்கில் விஜய் செயல்பட்டதால், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆதரவு வழங்கியதாகவும் திருமாவளவன் கூறினார். மேலும், தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டபோதும், பாஜகவின் திட்டமான குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், பெரும்பான்மை நிலை உருவாகாத சூழலில் தவெகவுக்கு ஆதரவு வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டில் சங் பரிவார் அரசியல் நுழையக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு அமைச்சராகியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய கட்சிகளில் அமைச்சராகும் வாய்ப்பு இருந்தாலும், அம்பேத்கரிய இயக்கங்களிலிருந்து அமைச்சராகும் நிலை மிக அரிது என்றும், அந்த வகையில் விசிக அமைச்சரவையில் பங்கேற்றிருப்பது முக்கிய முன்னேற்றம் எனவும் திருமாவளவன் கூறினார்.
சட்டம்-ஒழுங்குக்கு முதல் முக்கியத்துவம் தர வேண்டும் – உதயநிதி வலியுறுத்தல்
