அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கவும், சுகாதார சேவைகளில் எந்தவித அலட்சியத்தையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை ஆய்வு செய்தார். மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் பொது மருத்துவ வார்டு மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வில் சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “நான் கல்வி கற்ற சென்னை மருத்துவக் கல்லூரியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமைச்சராக வந்து பார்வையிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் சுத்தம் மற்றும் சுகாதார சூழல் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடையே நிலவும் எண்ணமே, தனியார் மருத்துவமனைகளை நாடும் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றை மேலும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் தேவைக்கேற்ப உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளதாக அமைச்சர் கூறினார். அதே நேரத்தில், மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனியார் மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் உடனடி பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்தார். அரசு மருத்துவமனைகள் மீது மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பணியிடமாற்ற கவுன்சிலிங் விரைவில் நடைபெறும் என்றும், அது முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். “யாரையும் நம்பி ஏமாற வேண்டாம்” என்று முதலமைச்சர் சார்பாகவே தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
மேலும், மருத்துவமனையின் பிணவரையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உடல்கள் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து கேட்கப்பட்டபோது, நீதிமன்ற வழக்குகள் காரணமாக அவை அங்கு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் சிகிச்சை பெறுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அரசுத் துறையை நாங்கள் நம்பவில்லை என்றால் யார் நம்புவார்கள்? கண்டிப்பாக நாங்கள் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு உறுதியாக உள்ளது – ராஜ்மோகன் திட்டவட்டம்
