மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ரத்தான 12-ஆம் வகுப்புத் தேர்வுகள்! பாதிக்கப்பட்ட 23,052 மாணவர்களுக்கு விரைவில் மறுதேர்வு நடத்த சிபிஎஸ்இ உறுதி!
மத்திய கிழக்கு (வளைகுடா) நாடுகளில் நிலவும் அசாதாரணப் போர் மற்றும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, அங்குள்ள சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் சில ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2025-26 கல்வியாண்டிற்காக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிமுகப்படுத்திய ‘சிறப்பு மதிப்பீட்டு முறையில்’ (Special Evaluation Scheme) தலையிட உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
வழக்கின் பின்னணியும் மாணவர்களின் கோரிக்கையும்
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளில் பயிலும் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குப் பதிலாக, பள்ளி அளவில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் சிபிஎஸ்இயின் முறையை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்
“இந்தச் சிறப்பு மதிப்பீட்டு முறையால் மாணவர்களுக்கு எதிர்பார்த்ததை விடக் மிகக் குறைவான மதிப்பெண்களே கிடைத்துள்ளன. குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான DASA மற்றும் CIWG போன்ற உயர்கல்வி சேர்க்கை நடைமுறைகளுக்குக் குறைந்தபட்சம் 75% மதிப்பெண் அவசியமாகும். ஜே.இ.இ (JEE Main) நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற பல மாணவர்கள்கூட, இந்த சிபிஎஸ்இ மதிப்பெண் குறைவால் உயர்கல்வி வாய்ப்பை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தங்களை கம்பார்ட்மென்ட் தேர்வு (Compartment Exam) எழுதுபவர்களுடன் சேர்த்துத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.” என்று வாதிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சிபிஎஸ்இ அளித்துள்ள உறுதி
மாணவர்களின் இந்த விசேஷ கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அதேவேளையில் சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட முக்கிய உறுதிகளைப் பதிவு செய்து கொண்டது. வளைகுடா நாடுகளில் இதுபோன்ற அசாதாரணச் சூழலால் சுமார் 23,052 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவான மறுமதிப்பீடு (Re-evaluation) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்படும். தற்காலிக மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் பங்கேற்க உரிய உதவிகள் செய்யப்படும். சூழல் சாதகமாக மாறியதும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சிறப்புத் தேர்வு (Special Exam) நடத்தப்படும். அடுத்த சிறப்புத் தேர்வை நடத்துவதற்கான கால அவகாசத்தை 82 நாட்களில் இருந்து 70 நாட்களாகக் குறைக்க நடவடிக்கை பரிசீலிக்கப்படும்.
வழக்கு முடித்து வைப்பு
மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் அளிக்கப்பட்ட இந்தச் சாதகமான உறுதிமொழிகளைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடுத்து வரும் சிறப்புத் தேர்வில் விரைவாகப் பங்கேற்று, வரும் கல்வியாண்டிலேயே உயர்கல்விச் சேர்க்கையைப் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.
