மதுரையில் இருந்து சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நகைக்கடை மேலாளரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த பிரபல ரெயில் கொள்ளையன் மற்றும் அவனது கூட்டாளியைத் தனிப்படை போலீசார் வடமாநிலங்களில் அதிரடியாகக் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரியைச் சேர்ந்த தீபக் சஞ்செட்டி (47) என்பவர் தி.நகரில் உள்ள பிரபல தங்கம் மற்றும் வைர நகைக்கடையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை மாதம் வியாபார விஷயமாக ரூ.3 கோடி மதிப்பிலான நகைகளுடன் மதுரை சென்ற அவர், பணிகளை முடித்துக் கொண்டு ஜூலை 23-ஆம் தேதி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் சென்னை திரும்பினார். தாம்பரம் அருகே ரெயில் வந்தபோது, தன்னிடம் இருந்த நகைப் பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆப்பிள் வாட்ச் கொடுத்த துப்பு & தனிப்படை தேடுதல்
புகாரைப் பெற்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நகைப் பையிற்குள் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch) இருந்ததாகப் பாதிக்கப்பட்டவர் கூறியதையடுத்து, அதன் சிக்னலை டிராக் செய்தபோது அது திருச்சி – விருத்தாசலம் இடையே இயங்குவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பயணிகள் பட்டியல், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவர் லொகேஷன்களை ஆய்வு செய்ததில், பல்வேறு ரெயில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் அமர்நாத் ஜெயஸ்வால் (64) மற்றும் அவனது கூட்டாளிகள் அதே பெட்டியில் பயணித்தது உறுதி செய்யப்பட்டது.
வடமாநிலங்களில் அதிரடி கைது
“சந்தேகத்திற்குரியவர்களின் செல்போன் உரையாடல்களைத் தொடர்ந்து கண்காணித்த தனிப்படை போலீசார், குற்றவாளிகள் வடமாநிலங்களில் பதுங்கியிருப்பதை உறுதிசெய்து உடனடியாக அங்கு விரைந்தனர். அதன்படி, மேற்கு வங்க மாநிலம் சிலிகுறி பகுதியில் பதுங்கியிருந்த முதன்மை குற்றவாளியான அமர்நாத் ஜெயஸ்வாலை, அங்குள்ள உள்ளூர் காவல்துறையின் உதவியோடு ஒரு தனிப்படை அதிரடியாகக் கைது செய்தது. அதேநேரத்தில், பிஹார் மாநிலம் பாட்னாவில் பதுங்கியிருந்த அவனது கூட்டாளி ரஞ்சன் குமாரை மற்றொரு தனிப்படை கைது செய்ததோடு, அவரிடமிருந்த ரூ. 4 லட்சம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தது.” இருவரையும் ‘டிரான்சிட் வாரண்ட்’ மூலம் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திடுக்கிடும் கொள்ளை சம்பவம்: போலிசார் தகவல்
“கைது செய்யப்பட்டுள்ள பிரபல கொள்ளையன் அமர்நாத் ஜெயஸ்வால் மீது ஏற்கனவே பல்வேறு ரயில்வே காவல் நிலையங்களில் 36-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவம் நடந்த நாளன்று, நகைக் கடை மேலாளர் கழிவறைக்குச் சென்ற நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், அவரது நகைப் பையைத் திருடியுள்ளனர். தொடர்ந்து, ரெயில் கழிவறையிலேயே நகைகளைத் தங்களது பைகளுக்கு மாற்றிக்கொண்ட அவர்கள், காலிப் பையையும் அதிலிருந்த ‘ஆப்பிள் வாட்ச்’ கருவியையும் ஓடும் ரெயிலில் இருந்தே வெளியே வீசியுள்ளனர். பின்னர் சென்னை வந்தடைந்ததும், தங்களது மற்றொரு கூட்டாளியான ராஜன் குமாரை விமானம் மூலம் வரவழைத்து, அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கொடுத்துத் தப்ப வைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.”
அடுத்த கட்ட நடவடிக்கை
தலைமறைவாக உள்ள மற்றொரு கூட்டாளி அசோக் குமாரைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான நகைகளை முழுமையாக மீட்பதற்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர். துரிதமாகச் செயல்பட்ட தனிப்படை போலிசாரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கொடூரக் கொலை: மனைவியும் காதலனும் கைது!
