ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி திருக்கோவிலின் ஆடிப்பெருந்தேர்த் திருவிழாவைக் முன்னிட்டு, மூலவர் தெய்வங்கள் எழுந்தருளிய மறு தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது.
3 கிலோமீட்டர் தூரம் தேரைத் தோளில் சுமந்த பக்தர்கள்
இக்கோவிலின் ஆடிப்பெருந்தேர்த் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த புதன்கிழமை புதுப்பாளையத்தில் உள்ள மடப்பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனக்கோவிலுக்கு மகமேறு தேர்கள் புறப்பட்டன. குருநாதசாமி மற்றும் பெருமாள் சுவாமி தேர்களிலும், காமாட்சி அம்மன் பல்லாக்கிலும் எழுந்தருள, பக்தர்கள் தங்களது தோள்களில் சுமந்து வனக்கோவிலுக்குக் கொண்டு சேர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை வனக்கோவிலில் இருந்து மீண்டும் புதுப்பாளையம் மடப்பள்ளிக்கு மறு தேரோட்டம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று மகமேறு தேர்களையும் பல்லாக்கையும் தோளில் சுமந்து வந்தனர்.
தமிழகத்திலேயே முதன்முறை: மூலவர்களே தேரில் எழுந்தருளும் வைபவம்!
தமிழகத்திலேயே வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, இக்கோவிலில் வேங்கை மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலைகளே தேரில் எழுந்தருளுகின்றன. குருநாதசாமி, பெருமாள்சாமி மற்றும் காமாட்சி அம்மன் ஆகிய மூலவர் சிலைகளுக்கு வெள்ளிக்கவசங்கள் சாத்தப்பட்டு, அவை நேரடியாகத் தேரிலும் பல்லாக்கிலும் படியமர்த்தப்பட்டு எடுத்துச் செல்லப்படுவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். மறு தேரோட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்றும் நாளையும் மடப்பள்ளியில் உள்ள மகாமண்டபத்தில் சுவாமிகள் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளனர்.

காலதாமதமும் மாற்றமும்
வழக்கமாகப் புதன்கிழமை காலை தொடங்கும் தேரோட்டம் மாலைக்குள் முடிவடைந்து, மறுநாளான வியாழக்கிழமையன்றே மறு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு புதன்கிழமை இரவு 11 மணிக்கு பின்னரே தேர்கள் வனக்கோவிலைச் சென்றடைந்ததால், வியாழக்கிழமைக்கு மாற்றாக வெள்ளிக்கிழமையான இன்று காலை மறு தேரோட்டம் நடைபெற்றது.
புகழ்பெற்ற ஆட்டு சந்தை, குதிரை சந்தை
இந்தத் திருவிழாவை முன்னிட்டுத் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற குதிரைச் சந்தை மற்றும் கால்நடைச் சந்தையும் கலைகட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வரும் இத்திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
