ஆடிப் பூரத் திருவிழாவை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் பக்திப் பரவசமும், கலைத் திருவிழாவும் இணைந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வு அரங்கேறியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில், சுமார் 65 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கிளி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.


வண்ண மலர்களால் நாச்சியார் கோலம்: பக்தி கோஷம் முழங்கிய காலடிப்பேட்டை
ஆடி மாதம் பூரம் நட்சத்திர நன்னாளை முன்னிட்டு, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக, கிளி வாகனத்தில் எழுந்தருள்வதற்காக ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு வண்ண வண்ண மலர்மாலைகளால் பேராசை ஊட்டும் வகையில் எழில்மிகு ‘நாச்சியார் கோலம்’ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட ஆண்டாளைத் தரிசித்த திரளான பக்தர்கள், “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்திப் பரவசத்துடன் எழுப்பிய முழக்கம் கோவில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது.
நான்கு மாட வீதிகளில் பக்திப் பெருவெள்ளம்
கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஆண்டாளின் கிளி வாகன ஊர்வலம், அப்பகுதியின் முக்கிய வீதிகளான, சன்னதி தெரு,எழுத்துக்காரன் தெரு,சாத்தாங்காடு நெடுஞ்சாலை, மேற்கு மாட வீதி மற்றும் வன்னியர் தெரு, ஆகிய நான்கு மாட வீதிகளிலும் மிகக் கோலாகலமாக வலம் வந்தது. பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்களது பகுதிக்குக் கிளி வாகனத்தில் வலம் வரும் ஆண்டாளைக் காண, வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் காத்திருந்தனர். ஆண்டாள் வீதி உலா வந்த போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும், தேங்காய் உடைத்தும் மனமுருகி பக்திப் பரவசத்துடன் நாச்சியாரை வரவேற்று வழிபட்டனர்.

பெருமாள் வேடமணிந்த கலைஞருடன் செல்ஃபி திருவிழா!
இந்த ஆன்மீக ஊர்வலத்திற்கு மேலும் ஒரு சுவாரசியமான சிறப்பம்சமாக, கலைஞர் ஒருவர் பெருமாள் மற்றும் தாயார் வேடமிட்டு பக்திப் பாடல்களுக்கு ஏற்ப ஊர்வலமாக நடந்து வந்தார். தத்ரூபமாக வேடமிட்டு வந்த அவரைக் கண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், உற்சாகமடைந்து அவருடன் மொபைல் போன்களில் ‘செல்ஃபி’ (Selfie) எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
கேரளா நடனம், பிரம்மாண்ட கொரில்லா, வானவேடிக்கை: அசத்திய கலைக் கொண்டாட்டம்
பாரம்பரிய ஆன்மீக நிகழ்வாக மட்டுமன்றி, இளைஞர்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் மாபெரும் கலைக் கொண்டாட்டமாக இந்த ஊர்வலம் அமைந்திருந்தது. ஊர்வலத்தின் முன்னே அதிரவைக்கும் மேளதாளங்கள் முழங்க, கேரளாவின் பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டன. மேலும், அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரம்மாண்ட கொரில்லா உருவ பொம்மலாட்ட ஆட்டம் மற்றும் கண்கவர் வண்ணமயமான வானவேடிக்கைகள், பட்டாசு முழக்கங்கள் என ஆட்டம் பாட்டத்துடன் இந்த ஆண்டாள் ஊர்வலம் திருவிழா கோலமாக நடைபெற்றது. 65 ஆண்டுகள் என்கிற நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிளி வாகன ஊர்வலம், திருவொற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பகுதிவாழ் ஆன்மீக பக்தர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
