திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.
முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான மாலை உற்சவர் புலி வாகனத்தில் வீதியுலா வந்தபோது, பக்தர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடினர். முருகப்பெருமான் அறுபடை வீடுகள் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த, 21ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை தாயாருடன் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளில் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்நிலையில், பிரம்மோற்சவ பெருவிழாவின் ஆறாம் நாளான இன்று மாலை, 4:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி–தெய்வானையுடன் புலி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது வீதியுலாவின் போது பக்தர்கள் மீது மஞ்சள் நீர் ஊற்றி கொண்டாடினர். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகர் யானை வாகனத்தில் உலா வந்தார்.
நாளை இரவு மரத்தேராட்டம் மற்றும் நாளை மறுநாள் (28ம் தேதி) நள்ளிரவில் முருகர்–தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
