அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்றதில் இருந்து, அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா நடைமுறைகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இதுவரை 1,75,000-க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


கடுமையாக்கப்படும் விசா விதிமுறைகள்: டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், அமெரிக்காவிற்குள் நுழையும் வெளிநாட்டினரின் பின்னணி, விசா விதிமுறைகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளை மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதன் விளைவாக, இதுவரை சுமார் 1.75 லட்சம் விசாக்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரியின் எச்சரிக்கை: இந்த விவகாரம் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரி டாம் ஹோமன் ‘பாக்ஸ் நியூஸ்’ நிகழ்ச்சியில் பேசுகையில், தற்போதைய நடவடிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே என்று குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
“அமெரிக்க விசா என்பது ஒரு உரிமை அல்ல, அது ஒரு சலுகை என்பதை அனைவரும் உணர வேண்டும்.”
“நாங்கள் வருபவர்களிடம் இரண்டே விஷயங்களைத்தான் எதிர்பார்க்கிறோம்: நீங்கள் யார், எதற்காக வருகிறீர்கள் என்பதை உண்மையாகச் சொல்லுங்கள். அமெரிக்காவில் இருக்கும்போது சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளுங்கள்.”
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை: முந்தைய ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நிலுவையில் இருந்த மற்றும் முறையாக ஆய்வு செய்யப்படாத அகதிகள் விண்ணப்பங்களை தற்போது ட்ரம்ப் நிர்வாகம் மறுஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், அமெரிக்க சட்டங்களை மீறியவர்கள் மற்றும் விசா விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹோமன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு: நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பான எல்லையை அதிபர் ட்ரம்ப் உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்ட டாம் ஹோமன், சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரம், அமெரிக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், விசா தொடர்பான விதிமுறைகளை வெளிநாட்டினர் மிகுந்த கவனத்துடன் பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உலக வரைபடத்திலிருந்து மறையப்போகும் துவாலு: கடலில் மூழ்கும் அபாயத்தில் ஒரு நாடு!
