தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தில், திருமணத்திற்குப் புறம்பான உறவை வெளியே கூறிவிடுவதாக மிரட்டிய தம்பதியை, போலீஸ் கான்ஸ்டபிள் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கோரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நிகழ்ந்த விபரம்:
சூர்யாபேட் மாவட்டம் மோத்தே மண்டலம் பிக்யதாண்டாவைச் சேர்ந்தவர்கள் ஹலாவத் நாகுலு (50) – ஹலாவத் பூபா (41) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், அவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. இதனையடுத்து, மோத்தே கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து தம்பதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களது மருமகன் கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுத்ததால், அதே ஊரைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் உதவியுடன் மோத்தே காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு சுந்தருக்கு ஏற்கனவே பழக்கமானவரான, சூர்யாபேட் நகரைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் முகமது ஷெரீப் (23) என்பவருடன் தம்பதிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் ஷெரீப்பிற்கும், தன்னைவிட வயதில் மூத்தவரான பூபாவிற்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவாக மாறியது.
இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, ஷெரீப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பூபாவிடம் மொத்தம் 3 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கான்ஸ்டபிள் ஷெரீப்பிற்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கொலைக்கான காரணம்:
தனது திருமணத்திற்குப் பணம் தேவைப்பட்டதால், பூபாவிடம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் படி ஷெரீப் கேட்டுள்ளார். ஆனால், பூபாவோ பணத்தைத் தர மறுத்ததுடன், தங்களது உறவை வெளியே சொல்லிவிடுவேன் என்றும், இதனால் உனது திருமணம் நின்றுவிடும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஷெரீப், இது குறித்து தனது நண்பரான சுந்தரிடம் கூறி தம்பதியைக் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.
அரங்கேறிய கொடூரம்:
திட்டத்தின்படி, அரசு ஆட்டுக் கடன் தருவதாகவும், அதிகாரிகள் சோதனையின்போது காட்டுவதற்காகக் கிராமத்தின் எல்லையில் ஒரு குழி தோண்டி ஆட்டு எருவை அதில் போட வேண்டும் என்றும் கூறி நாகுலு – பூபா தம்பதியை சம்மதிக்க வைத்துள்ளனர்.
கடந்த 11-ஆம் தேதி இரவு, மோத்தே கிராமத்தின் எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே உள்ள நிலத்திற்கு நாகுலுவை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழி தோண்டிக் கொண்டிருந்தபோது, ஷெரீப் பின்னாலிருந்து கல்லால் நாகுலுவின் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை அதே குழியில் புதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, “புகைப்படம் எடுக்க வேண்டும்” என்று கூறி பூபாவையும் அதே பைக்கில் வரவழைத்து, அவரையூம் கொன்று தனது கணவர் புதைக்கப்பட்ட அதே குழியிலேயே போட்டு மூடியுள்ளனர். மேலும், பூபா அணிந்திருந்த நகைகளையும் அவர்கள் திருடிச் சென்றனர்.
போலீசாரின் அதிரடி கைது:
இதனிடையே, மோத்தே கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் மேம்பாலம் அருகே கால்கள் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் சடலங்கள் கிடப்பதாக மோத்தே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
உயிரிழந்தவர்கள் நாகுலு மற்றும் பூபா என்பது அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் கடைசியாக யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை அறிய மொபைல் டவர் சிக்னல்கள் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கான்ஸ்டபிள் ஷெரீப்பிற்கும் பூபாவிற்கும் இருந்த கள்ளத்தொடர்பு, 3 லட்சம் ரூபாய் பணப் பரிவர்த்தனை தகராறு மற்றும் கொலைக்கான காரணம் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இதனைக் தொடர்ந்து, சூர்யாபேட் பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த கான்ஸ்டபிள் ஷெரீப் மற்றும் அவரது கூட்டாளி சுந்தர் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட தடி, பைக் மற்றும் இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையில் பணியாற்றும் ஒருவரே பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பிற்காகக் கணவன்-மனைவியை அடித்துக் கொன்று புதைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை கல்லூரி மாணவன் அமுதன் உயிரிழப்பு: கொலையா? தற்கொலையா? வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
