திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கோவில்கள் மற்றும் மின்விளக்கற்ற பகுதியில் மதுக்கடை
லால்குடி – செங்கரையூர் சாலையில், அரியூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புதிதாக அரசு மதுபானக் கடை ஒன்று திறக்கப்பட்டது. சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்த இந்தப் பகுதியில், புகழ்பெற்ற அன்பில் மாரியம்மன் கோவில் மற்றும் பூண்டி மாதா கோவிலுக்குச் செல்லும் முதன்மைப் பாதையாகவும் இது விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணிக்கும் இந்தப் பாதையில் தெருவிளக்கு வசதிகளும் இல்லாத சூழலில், மதுக்கடை அமைக்கப்பட்டதால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசுக்கு எதிராகக் கொந்தளித்த பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவிக்கையில், “717 கடைகளை மூடியதாகக் கூறும் அரசு, தற்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடமாடும் பகுதியில் புதிதாக மதுக்கடையைத் திறந்து வருகிறது. இந்த மதுக்கடையால் பெண்களும் இளைஞர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த கடையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பி ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை – தற்காலிகமாகப் போராட்டம் வாபஸ்
பொதுமக்களின் சாலை மறியல் காரணமாகச் செங்கரையூர் – லால்குடி சாலையில் நீண்ட நேரமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகச் சென்று மனு அளிக்குமாறு அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டனர்.
