தமிழகத்தில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
5% வீழ்ச்சியும் காலியாகும் இடங்களும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 422 பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2.67 லட்சம் இடங்களுக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. முதல் இரு சுற்றுகள் முடிவில் மொத்தம் 88,930 இடங்கள் நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டில் 2-ம் சுற்று முடிவில் 46.34% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 41.15% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் இந்த ஆண்டு கலந்தாய்வு முடிவில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக வாய்ப்புள்ளதாகக் கணிப்பீடுகள் கூறுகின்றன.

தன்னாட்சிக் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம்: உறுப்புக் கல்லூரிகளில் தேக்கம் மாணவர்கள் நல்ல உட்கட்டமைப்பு கொண்ட பிரபல நகர்ப்புறத் தன்னாட்சிக் (Autonomous) கல்லூரிகளுக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளனர்.
தன்னாட்சிக் கல்லூரிகள்: நிரம்பிய மொத்த இடங்களில் 82.66% இடங்கள் (71,751 இடங்கள்) தன்னாட்சிக் கல்லூரிகளிலேயே நிரம்பியுள்ளன.
மண்டல முன்னுரிமை: கோவை மண்டலக் கல்லூரிகளில் அதிகபட்சமாக 41.5% (36,700 இடங்கள்) மாணவர்களும், அதைத் தொடர்ந்து சென்னை மண்டலத்தில் 35.93% மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
பின்னடைவு: அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி, எம்.ஐ.டி மற்றும் ஏ.சி.டி வளாகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அதன் 17 உறுப்புக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். மேலும் 23 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை; 167 கல்லூரிகளில் சேர்க்கை 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆதிக்கம் – 6 பாடப்பிரிவுகளில் ‘பூஜ்யம்’ சேர்க்கை
மாணவர்களின் தேர்வு பாடப்பிரிவு சார்ந்த புதிய டிரெண்டை வெளிப்படுத்தியுள்ளது:
கம்ப்யூட்டர் சயின்ஸ் & ECE: ஒட்டுமொத்தச் சேர்க்கையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த பாடப்பிரிவுகள் மட்டுமே 57.04% (49,512 இடங்கள்) பங்கைக் கைப்பற்றியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக இ.சி.இ (ECE) பாடப்பிரிவில் 18.43% இடங்கள் நிரம்பியுள்ளன.
புதிய பாடப்பிரிவுகளுக்குப் பின்னடைவு: அதேவேளையில், ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ’, ‘டேட்டா விசுவலைசேஷன்’, ‘சுற்றுச்சூழல் அறிவியல்’ உள்ளிட்ட 6 புதிய பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாய்ஸ் ஃபில்லிங் குளறுபடிகளும் கல்வியாளர்களின் கவலையும் “190-க்கும் மேல் உயர் கட்-ஆஃப் எடுத்த 25 மாணவர்கள் உட்பட, முதல் சுற்றில் பங்கேற்ற பலர் தவறான முறையில் சாய்ஸ் ஃபில்லிங் (Choice Filling) செய்ததாலேயே இரண்டாம் சுற்றுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” எனப் பிரபல கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல, “மாணவர்கள் பெருமளவில் தன்னாட்சிக் கல்லூரிகளை நோக்கியே படையெடுப்பதால், அத்தகைய கல்லூரிகள் தரமாகத் தான் இயங்குகின்றனவா என்பதை அண்ணா பல்கலைக்கழகம் முறையாகக் கண்காணிக்க வேண்டும்” எனப் மற்றொரு கல்வியாளரான அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவில் அதிரடி மாற்றம்: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிபோகிறதா?
