விலை உயர்விலும் பழைய கட்டணமே! செப்டம்பர் 2027 வரை ஜியோ பிரைம் பயனர்களுக்கு பம்பர் ஆஃபர்!
இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது சேவையைத் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களைக் கவரும் ‘ஜியோ பிரைம்’ (Jio Prime) சந்தா திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.300-ல் ஜியோ பிரைம் சந்தா
கடந்த 2016-ஆம் ஆண்டு சந்தைக்கு வந்த ஜியோ நிறுவனம், தற்போது தனது 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜியோ பயனர்கள் ரூ.300 செலுத்தி ‘ஜியோ பிரைம்’ உறுப்பினராகத் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
2027 வரை பழைய ரீசார்ஜ் கட்டணமே செல்லுபடி
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வரும் தற்போதைய சூழலில், ஜியோ பிரைம் பயனர்களுக்கு மிக முக்கியச் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் உறுப்பினராக இணையும் பயனர்கள், எதிர்காலத்தில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், வரும் செப்டம்பர் 5, 2027 வரை தற்போதைய பழைய கட்டண விலையிலேயே தங்களது ரீசார்ஜ் திட்டங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.600 கேஷ்பேக் ஆஃபர்
பிரைம் சந்தா தொகையான ரூ.300-ஐத் தாண்டி, பயனர்களுக்குக் கூடுதல் நன்மையாக ரூ.600 மதிப்புள்ள கேஷ்பேக் (Cashback) சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜியோவின் இந்தத் திடீர் ஜியோ பிரைம் மறுஅறிமுகம் மற்றும் 2027 வரையிலான கட்டணப் பாதுகாப்பு அறிவிப்பு, ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
