தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட பரிசல் இயக்கத்திற்கான தடை 15-வது நாளாக நீடிக்கிறது.
நீர்வரத்து தொடர்ந்து உயர்வு
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை 10 மணி நிலவரப்படி 11,000 கன அடியாக அதிகரித்துள்ளது.ஒகேனக்கல் ஆற்றில் தொடர்ந்து 2-வது நாளாக 10,000 கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து நீடித்து வருவதால், அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
நீர்வரத்து அதிகமாக இருக்கும் காரணத்தால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கத் தடை விதித்துள்ளது. இத்தடை தொடர்ந்து 15-வது நாளாக நீடிப்பதால், பரிசல் இயக்கத்தையே முழுமையாக நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான பரிசல் ஓட்டிகள் மற்றும் உள்ளூர் சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப் பெருமளவில் கவலையடைந்துள்ளனர். தற்போது ஆற்றில் நீர்வரத்தை மாவட்ட நிர்வாகமும், தீயணைப்புத் துறையினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னரே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
