கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: ஈபிஎஸ்
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை சந்திக்க நாளை மரக்காணம் செல்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மரக்காணம் அருகே கள்ளாச்சாராயம் குடித்து சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் கள்ளச்சாராய மரணங்களை அரசு தடுத்து நிறுத்தியிருக்கலாம். தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படமுடியவில்லை. கஞ்ச ஒழிப்பு 2.0,3.0 என ஓ போட்டுக்கொண்டிருக்கின்றனர். பொம்மை முதலமைச்சர் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது.

கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ராஜினாமாக செய்ய வேண்டும். 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொல்லி 1,000 டாஸ்மாக் கடைகளை திறக்கின்றனர். மதுவிலக்குத்துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே இருக்கின்றன. தமிழ்நாட்டில் போலி மதுபானம் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளச்சாராயம் அதிக அளவு பெருகி இருப்பது குறித்து சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதத்தில் எடுத்து கூறினேன். ஆனால் அது குறித்து அரசு கவனம் செலுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் பொறுப்பேற்றதிலிருந்து கொலை, கொள்ளை, கஞ்சா உள்ளிட்டவை பெருகி உள்ளது. கஞ்சா விற்பனையை கூட தடுக்க முடியாத திறமையற்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.” என்றார்.