பூவிருந்தவல்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சென்னை மெட்ரோ ரயில் பணிமனை (Depot) அருகே, குப்பைகள் மலை போலக் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அதனைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும் என பூவிருந்தவல்லி நகராட்சிக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அவசரக் கடிதம் எழுதியுள்ளது.
மாதம் ₹60 லட்சம் செலவு.. ஆனால் பல மாதங்களாக அகற்றப்படாத குப்பை! பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் திடக் கழிவுகளையும் குப்பைகளையும் முறையாகச் சேகரித்து அப்புறப்படுத்துவதற்காகத் தனியார் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக நகராட்சி நிர்வாகம் தரப்பில் ஒப்பந்ததாரருக்கு மாதம் தோறும் சுமார் ரூ.60 லட்சம் வரை மக்களின் வரிப்பணம் நிதியாக வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், பல மாதங்களாக இந்தச் சுத்திகரிப்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நகராட்சியின் பல வார்டுகளில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான குப்பைகள், தரம் பிரிக்கப்படாமல் பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பணிமனை கட்டப்பட்டு வரும் இடத்தின் அருகிலேயே கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன.

மெட்ரோ ரயில் நிறுவனம் கெடு!
நாளுக்கு நாள் குப்பைகள் குவிந்து மலை போல் காட்சியளிப்பதோடு, மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசி, கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், மெட்ரோ ரயில் பணிமனைப் பணிகளுக்கும், அங்குள்ள பணியாளர்களின் ஆரோக்கியத்திற்கும் இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையருக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “மெட்ரோ பணிமனை வளாகத்தைச் சுற்றி மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்; இனி வரும் நாட்களில் அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்” எனத் திட்டவட்டமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் ஆத்திரம்!
மாதம்தோறும் 60 லட்ச ரூபாய் வரை மக்களின் வரிப்பணம் ஒப்பந்ததாரருக்குத் தாராளமாக ஒதுக்கப்படும் நிலையில், குப்பைகளை அகற்றாமல் அலட்சியம் காட்டி வரும் நகராட்சி நிர்வாகத்தின் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை அல்லது உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மெட்ரோ நிறுவனமே கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது பூவிருந்தவல்லி நகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
