தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இந்த கூடுதல் வசூலை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. மதுபாட்டிலுக்கு 1 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கூட முதல் முறை 3 மாதங்கள் தற்காலிகப் பணிநீக்கமும், மீண்டும் அதே தவறைச் செய்தால் நிரந்தரப் பணிநீக்கமும் செய்யப்படும் என அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
200 ஊழியர்கள் சஸ்பெண்ட் & வெடித்த போராட்டம்
அரசின் இத்தனை கடுமையான எச்சரிக்கையையும் மீறி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து கூடுதல் பணம் வசூலித்து வந்தனர். புகார்களின் அடிப்படையில் அடுத்தடுத்து களமிறங்கிய டாஸ்மாக் நிர்வாகம், விதிகளை மீறிய 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்தது.

அரசின் இந்த நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள டாஸ்மாக் பணியாளர்கள், கூடுதல் பணம் வசூலிக்கும் நடைமுறையைத் தொடர அனுமதிக்கக் கோரியும், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடைகளைத் திறக்க மறுத்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில் புதிய கட்டடம் திறப்பு
இந்த பரபரப்பான சூழலில், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தை மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் குறித்துப் பல அதிரடி கருத்துகளை முன்வைத்தார்.

“200 படிகளில் 75-ஐ துடைத்துவிட்டோம்”
டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து ஆவேசமாகப் பேசிய அமைச்சர் விக்னேஷ், “டாஸ்மாக் துறையில் சீரமைக்க வேண்டிய 200 படிக்கட்டுகள் உள்ளன. அதில் இதுவரை 75 படிக்கட்டுகள் மட்டுமே துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. எனக்குத் தெரிந்து மாநிலத்தின் பெரும்பாலான கடைகளில் எந்தப் பிரச்சனையும் இன்றி எம்.ஆர்.பி விலைக்குத்தான் மது விற்பனை நடைபெறுகிறது. சில இடங்களில் தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதால் மட்டுமே கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
ஊழியர்களின் இதுபோன்ற வேலைநிறுத்த மிரட்டல்களுக்கெல்லாம் இந்த அரசு ஒருபோதும் பயப்படாது; பணியவும் செய்யாது. தவறு செய்தால், யார் கூடுதல் பணம் வாங்கினாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நிச்சயமாகக் கடுமையான நடவடிக்கை பாயும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நேரடி எச்சரிக்கை டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை அடையாளம் காண DNA பரிசோதனை! தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை
