Homeசெய்திகள்தமிழ்நாடுபூம்புகார் ஆழ்கடலில் 3-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: ஸ்கூபா டைவ் அடித்து ஆய்வு செய்த அமைச்சர்...

பூம்புகார் ஆழ்கடலில் 3-ம் கட்ட அகழாய்வு தொடக்கம்: ஸ்கூபா டைவ் அடித்து ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்!

-

- Advertisement -

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பழந்தமிழர் நாகரிகத்தின் தொன்மையை கண்டறியும் வகையில், ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் (Scuba Dive) செய்து 3-ம் கட்ட கடல்சார் அகழாய்வுப் பணிகளை பள்ளிக் கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கிவைத்தார்.

we-r-hiring

முந்தைய கட்ட அகழாய்வுகள்: தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 2025 மற்றும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2 கட்டங்களாகப் பூம்புகாரில் கடல்சார் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கடலில் மூழ்கிய பண்டைய பூம்புகாரின் கட்டிடங்கள், சுற்றுச்சுவர், சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள், பானை ஓடுகள், செங்கற்கள் கண்டறியப்பட்டதுடன், 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றும் கண்டறியப்பட்டது.

ஆழ்கடலில் இறங்கி ஆய்வு செய்த அமைச்சர்: தமிழக அரசின் உத்தரவின்படி, பூம்புகார் கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் ஆழ்கடலில் ஸ்கூபா டைவ் முறையில் இறங்கி ஆய்வுகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, கடல்சார் ஆராய்ச்சி ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில் தொல்லியல் துறை இணை இயக்குநர் யதீஷ்குமார், ஓய்வுபெற்ற இணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் துறை அலுவலர் வசந்தகுமார் மற்றும் ஸ்கூபா டைவர்ஸ் என 25 பேர் கொண்ட குழுவினர் நவீன கேமராக்கள் மற்றும் உபகரணங்களுடன் கடலுக்குள் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பு: ஆய்வுக்குப் பின் பூம்புகார் துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்:

பூம்புகாரில் தமிழர் பயன்படுத்திய பானை ஓடுகளுடன், வெளிநாட்டுப் பானை ஓடுகளும் தென்பட்டுள்ளன. இதன் மூலம் இது ஒரு புகழ்பெற்ற வணிக மற்றும் பண்பாட்டு நகரமாக விளங்கியது தெரிகிறது. கடலுக்கடியில் கட்டுமானச் சுவர்களும் உறைக்கிணறுகளும் தென்பட்டுள்ளன.

உலகத்துக்கே நாகரிகத்தைக் கற்றுத்தந்தவர்கள் தமிழர்கள் என்ற உண்மை விரைவில் வெளிவரும். சிந்து சமவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தொட்டுவிடும் தொலைவில் உள்ளோம். பூம்புகார் உலக அளவில் ஜொலிக்கும்”* எனத் தெரிவித்தார்.

மேலும், மழையில் நெல் மூட்டைகள் நனைந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்காலிக ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்த அவர், தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

MUST READ