“தமிழகத்தில் தவெக சார்பில் ஹிட்லர் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் விஜய் வெளியில் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும், மிகவும் தந்திரமாகவும், நரித்தனமாகவும், விஷமத்தனமான செயல்பாடுகளிலும்தான் ஈடுபட்டு வருகிறார்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற மற்றும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த பி.கே.மூக்கையாத்தேவரின் 47-வது நினைவு தினத்தை முன்னிட்டு, உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் தலைமையிலான நிர்வாகிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் அளித்த பேட்டியின் விவரம்:
“25 பேரை நடுரோட்டில் நிறுத்திவிட்டார்கள்!”
“ஐயா மூக்கையாத்தேவரின் சேவைகளைப் போற்றி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். தவெக ஆட்சி குறித்து நாங்கள் பேசினால் கால்புணர்ச்சியால் பேசுவதாகக் கூறுகிறார்கள். உண்மையில் இந்த ஆட்சியைப் பற்றிப் பேச எதுவுமே இல்லை.

சினிமாத் துறையிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று நம்பி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், ஆட்சியின் ஆரம்பத்திலேயே அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 25 பேரையும், அமமுக எம்.எல்.ஏ ஒருவரையும் நடுரோட்டில் நிறுத்திவிட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது போலத் தந்திரமாகக் காட்டி, இறுதியில் நிறைவேற்றாமல் ஏமாற்றும் வேலைகளைச் செய்கிறார்கள். காவேரி நீரைத் திறக்கச் சென்ற முதலமைச்சர் விஜய், ஏதோ எம்.ஜி.ஆர் பாணியில் நடந்துகொள்ள முயல்கிறார். அப்படிச் செய்வதனாலேயே ஒருவர் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது.”
“சட்டமன்றத்தில் காட்டு கத்து கத்துகிறார்கள்!”
“அண்ணா காலத்தில் இளைஞர்கள் அரசியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். ஆனால், இங்கு உள்ளவர்களுக்கு அடிப்படைப் புரிதல் இருக்கிறதா என்றே தெரியவில்லை. ஆறாம் அறிவு கூட இல்லை என்பதையே இவர்களது செயல்பாடுகள் காட்டுகின்றன. முதலமைச்சருக்கு எழுதி வைத்ததைக் கூடச் சரியாகப் பேசத் தெரியவில்லை. அமைச்சர்கள் பேசுவதும், திமுக, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை உதாசீனம் செய்வது போல பேசுவதும் கண்டிக்கத்தக்கது. பிளாக் டிக்கெட் விற்று வந்தவர்கள் தான் இன்றைக்குச் சட்டமன்றத்தில் காட்டு கத்து கத்திக் கொண்டிருக்கிறார்கள். தில்லுமுல்லு செய்து, பணம் தருவதாக ஆசை காட்டி மாற்றுக்கட்சியினரை ஆதரவளிக்க வைத்தார்கள். ஆனால், அவர்கள் தங்களின் சொந்தச் செயல்களாலேயே வீழ்ந்துவிடுவார்கள்.”
“நரித்தனமான செயல்பாடுகள்!”
“தற்போது தமிழகத்தில் நடப்பது முழுக்க முழுக்க ஒரு ஹிட்லர் ஆட்சிதான். முதலமைச்சர் விஜய் பார்ப்பதற்குத் தான் அமைதியாகத் தெரிகிறாரே தவிர, மிகவும் நரித்தனமாகவும், தந்திரமாகவும், விஷமத்தனமாகவும் செயல்பட்டு வருகிறார். நாளைய தினம் சட்டமன்றத்தில் அவர் பேசப்போகும் பேச்சும் வழக்கம்போலச் சினிமா வசனம் போலத் தான் இருக்கும். நான் அதிமுக இணை பொதுச்செயலாளர் என்பதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்திதான். அதுபோன்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. மேலும், மேகமலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்கவே உங்களை அமைச்சராக்கியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”
