தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ள நிலையில், வரவிருக்கும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வெப்பநிலை நிலவரம்: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் 39.3°C, மதுரையில் 38.7°C, ஈரோட்டில் 39°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.2°C, மீனம்பாக்கத்தில் 33.8°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 11) மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
செப்டம்பர் 12: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
செப்டம்பர் 13 & 14: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 15: விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 16: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்: சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
