நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – சுற்றுலாப் பயணிகளின் நிலை என்ன?
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி மற்றும் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த இருபத்திரெண்டு பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணம் செல்ல வேனில் சென்றுள்ளார்கள். இவர்கள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தளங்களை கண்டுகளித்து பழனிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கொடைக்கானல், பழனி மலைப்பாதையில் பயணிகள் வந்து கொண்டிருந்தார்கள். இதில் மன்னார்குடியைச் சேர்ந்த இளம்பரிதி (வயது 25) என்பவர் வாகனத்தை ஓட்டினார்.

சவரிக்காடு அருகே ஏழாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வேனின் ஓட்டுநர் இளம்பரிதி கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியுள்ளது. ஒரு கட்டத்தில் சாலையோரத்தில் உள்ள நூறடி பள்ளத்துக்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் இளம்பரிதி, மன்னார்குடி வ.உ.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த கவுரி (வயது18), தன்சிகா (வயது 4), திவ்யா (வயது 29), வசந்தா (வயது 70), முகேஸ்வரன் (வயது 15), காயத்ரி (வயது 21), பாரதி செல்வன் (வயது 15), சங்கவி (வயது 26), தஞ்சாவூரை அடுத்த மடிகை பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 45) உட்பட 22 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் விபத்துக்குள்ளானவர்கள் அலறிய சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் பழனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். இதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்க்கு நேரில் விரைந்து சென்றார்கள். பின்னர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி காயமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்துள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக் குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.