Homeசெய்திகள்தமிழ்நாடுபேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: ‘சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக பட்டிமன்றங்களை மாற்றியவர்’ - தமிழக...

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: ‘சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக பட்டிமன்றங்களை மாற்றியவர்’ – தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி!

-

- Advertisement -

தமிழ் பட்டிமன்ற உலகின் ஒப்பற்ற அடையாளமும், பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல தமிழ் அறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90), உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் உட்படப் பல தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: ‘சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக பட்டிமன்றங்களை மாற்றியவர்’ - தமிழக முதல்வர் விஜய் புகழஞ்சலி!

சிகிச்சை பலனின்றி மறைவு
மதுரை ஞானஒளிவுபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சாலமன் பாப்பையாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

we-r-hiring

எளிய பின்னணியும் தமிழ் தொண்டும்
மாநகராட்சிப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைப் பயின்ற அவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவரான பாப்பையா, சமூகத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களைச் சுவாரசியமாக நடத்தி வந்தார்.

பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து கடல் கடந்தும் தமிழை வளர்த்தவர். சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தார். இவரின் தமிழ்ப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு 2021-ஆம் ஆண்டு நாட்டின் நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது.

‘தமிழ்க்கூறு நல்லுலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு’ – முதலமைச்சர் விஜய் இரங்கல்
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பங்கு மகத்தானது.

அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

சோகத்தில் தமிழ் உலகம்
சாலமன் பாப்பையாவின் மறைவு செய்தி கேட்டதும் மதுரை ஞான ஒளிவுபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பட்டிமன்றக் கலைக்கு உலகளாவிய முகவரியைத் தந்த ஒரு மாபெரும் தமிழ் ஆளுமையின் மறைவு, தமிழ் உலகுக்குப் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழர்களின் கொண்டாட்ட நாயகன் பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா காலமானார்: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்!

MUST READ