தமிழக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், அவர் தொழில் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லாமல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளாரா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அது எவ்வாறு நடைபெற்றது என்பதை பொதுமக்கள் பார்த்துள்ளதாகவும், சில சம்பவங்கள் வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
தமிழகத்தில் விரைவில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்த நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தால், அதற்கு பின்னால் குதிரை பேரம் நடைபெற்றிருக்கலாம் என சிலர் கூறுவதாக தெரிவித்தார்.
முதல்வர் விஜய் லண்டன் பயணம் குறித்து கேள்வி
முதல்வர் விஜய் லண்டன் சென்றிருப்பதை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், அவருடன் யார் யார் சென்றுள்ளனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதல்வர் லண்டன் சென்றிருந்தால், அங்கு யாரை சந்திக்க உள்ளார், எத்தனை முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வர உள்ளார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.
மூன்று நாட்கள் லண்டனில் இருக்கும் நிலையில், இந்த காலகட்டத்தில் எத்தனை தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“முதலீடுகளை ஈர்க்க சென்றிருந்தால் விவரம் தெரிய வேண்டும்”
முதல்வர் விஜய் தனது சொந்த காரணங்களுக்காக லண்டன் சென்றிருந்தால் அதுகுறித்து தான் எதுவும் கூற முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ஆனால், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் லண்டன் சென்றிருந்தால், யாரை சந்தித்தார், எவ்வளவு முதலீடு தமிழகத்திற்கு வர உள்ளது என்பது போன்ற விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
தொழில் துறை அமைச்சர் இல்லாமல் லண்டன் சென்றுள்ள முதல்வர் அங்கு யாரை சந்திக்கிறார், என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார் என்பது அவர் தமிழகம் திரும்பிய பிறகுதான் தெரியவரும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். மேலும், தான் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
