வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் (UCC) முழுமையாக நிறைவேற்றப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்
டெல்லியில் நடைபெற்ற முக்கியப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்குப் பொது சிவில் சட்டம் மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தினார். “மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான அரசு அமைந்துள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் உள்ள 21 மாநிலங்களிலும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பொது சிவில் சட்டத்திற்கான நடைமுறைகள் முடிந்து சட்டமாக்கப்படும்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக ‘பூஜ்ய சகிப்புத்தன்மை’
நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், “பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு ‘பூஜ்ய சகிப்புத்தன்மை’ (Zero Tolerance) கொள்கையைக் கடைபிடித்து வருகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும், அதை முறியடிக்க ராணுவத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
சட்டவிரோத குடியேறிகள் கண்டறிந்து வெளியேற்றம்
தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். “சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாகத் தொடரும். இதில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது” என்றும் அவர் எச்சரித்தார். உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு, தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதங்களை கிளப்பியுள்ளது.
