டெல்லியில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை வழங்கியதை தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ம் ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது காலத்தால் அழியாத திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிரதமர் மோடி வழங்கியது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைமிகு தருணம் என தெரிவித்துள்ளார்.
உலகளாவிய விழுமியங்களை எடுத்துரைக்கும் திருக்குறள்
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், அறம், நீதி, நல்லாட்சி, இரக்கம் மற்றும் மனிதநேயம் போன்ற உலகளாவிய விழுமியங்களை எடுத்துரைக்கும் ஒப்பற்ற படைப்பு என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளில் இடம்பெற்றுள்ள காலத்தால் அழியாத ஞானம், மொழி, பண்பாடு மற்றும் புவியியல் எல்லைகளை கடந்து மனிதகுலம் முழுமைக்கும் வழிகாட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பாராட்டு
திருவள்ளுவரின் பெருமையையும், தமிழின் செழுமையான இலக்கியப் பாரம்பரியத்தையும் உலக அரங்கில் சிறப்பாக எடுத்துரைத்த பிரதமர் மோடியை பெரிதும் பாராட்டுவதாக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
இந்த பண்பாட்டு நல்லுறவு நடவடிக்கை, தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும், மனிதகுலத்திற்கு அது வழங்கியுள்ள உலகளாவிய பங்களிப்பின் சிறப்பையும் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“திருவள்ளுவரின் ஞானம் மனிதகுலம் முழுமைக்கும் உரியது”
திருவள்ளுவரின் ஞானம் தமிழில் வேரூன்றியது என்றும், இந்தியாவால் போற்றப்படுகிறது என்றும், மனிதகுலம் முழுமைக்கும் உரியது என்றும் ஆளுநர் அர்லேகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டின் சர்வதேச அரசியல் முக்கியத்துவத்துடன், தமிழின் பெருமையையும் திருக்குறளின் உலகளாவிய சிறப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக பிரதமர் மோடி புதினுக்கு ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை வழங்கிய தருணம் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
