காணாமல் போன தங்கள் இரு சிறு மகன்களை மீட்கும் நோக்கில், பெற்ற தாயும் தந்தையும் பிச்சைக்காரர்களாக வேடமணிந்து 5 மாநிலங்களில் பல மாதங்கள் அலைந்து திரிந்து இறுதியாகத் தங்களது குழந்தைகளைக் கண்டறிந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
விளையாடச் சென்ற மகன்கள் மாயம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர், வேலை தேடி குஜராத்தின் முந்த்ரா பகுதிக்கு வந்து தங்களது 14 வயது மகன் ராகுல் மற்றும் 11 வயது மகன் அர்பித் ஆகியோருடன் வசித்து வந்தனர். கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடச் சென்ற இரு சிறுவர்களும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள், சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் சிறுவர்களைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காமல் பெற்றோர் தவித்துப் போயினர்.

சந்தேகமும் பிச்சைக்காரர் அவதாரமும்
குழந்தைகள் காணாமல் போய் 3 மாதங்கள் கடந்த நிலையில், தங்களது மகன்களை ஏதேனும் பிச்சைக்காரர் கும்பல் கடத்திச் சென்றிருக்கக்கூடும் எனப் பெற்றோர் சந்தேகிக்கத் தொடங்கினர். இதையடுத்து, தங்களது அன்றாட வேலையைத் துறந்த அத்தம்பதியினர், தாங்களே பிச்சைக்காரர்களைப் போல வேடமணிந்து களத்தில் இறங்க முடிவு செய்தனர். குழந்தைகளைத் தேடி குஜராத், மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களின் தெருக்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல மாதங்களாகப் பிச்சைக்காரர்களாகவே அலைந்து திரிந்து தகவல்களைச் சேகரித்து வந்தனர்.
ராஜஸ்தானில் கிடைத்த முதல் வெற்றி
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மூத்த மகன் ராகுல் ஒரு பிச்சைக்காரர் கும்பலுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்தத் தடயத்தைப் பின்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதிக்குச் சென்ற பெற்றோர், அங்குத் தங்களது மூத்த மகன் ராகுலைக் கண்டுபிடித்து மீட்டனர்.
ஹவுராவில் மீட்கப்பட்ட இளைய மகன்
இருப்பினும், இளைய மகன் அர்பித் இன்னும் கிடைக்காததால் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. ராகுல் மீட்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அர்பித் மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் இருப்பதாகப் பெற்றோருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த பெற்றோர், தங்களது இளைய மகனையும் பத்திரமாக மீட்டனர். பெற்ற பிள்ளைகளுக்காகத் தங்களது வாழ்க்கையையே துறந்து, பிச்சைக்காரர்களாக மாறிப் போராடி மகன்களை மீட்ட இந்தத் தம்பதியின் பாசப் போராட்டம் இந்திய அளவில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
