Homeசெய்திகள்இந்தியாபிரிக்ஸ் மாநாட்டின் 2வது நாள்: 7 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – சர்வதேச...

பிரிக்ஸ் மாநாட்டின் 2வது நாள்: 7 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்!

-

- Advertisement -

டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாளில், ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 7 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ‘மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் மாநாட்டின் முக்கிய பொது அமர்வு இன்று நடைபெறுகிறது.

we-r-hiring

11 உறுப்பு நாடுகள், 10 கூட்டு நாடுகள் பங்கேற்பு

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் 11 உறுப்பு நாடுகள் மற்றும் 10 கூட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 37 உயர் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும், சர்வதேச அளவில் பல்வேறு மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச அணுசக்தி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள அமைதியான அணுசக்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக கவலை தெரிவித்தன.

ஜின்பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை

மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள ஜின்பிங்கிடம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வளர வேண்டுமெனில் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுவது மிகவும் அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

உலகத் தலைவர்களுக்கு சிறப்பு இரவு விருந்து

மாநாட்டின் முதல் நாள் நிறைவில் உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் பாரத் மண்டபத்தில் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொண்டனர்.

மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சிறப்பு இந்திய உணவுகள்

உலகத் தலைவர்களுக்கான இரவு விருந்தில் பல்வேறு பிரத்யேக இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

பன்னீர் லபாப்தார், சிறுதானிய புலாவ், கேரட் பீன்ஸ் பொரியல், குச்சி மார்மிக், ஜிலேபியுடன் கூடிய பழ க்ரீம் மற்றும் ஷா தூத் பிர்னி உள்ளிட்ட உணவு வகைகள் விருந்தில் இடம்பெற்றன.

விருந்தின் மற்றொரு சிறப்பம்சமாக இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து வழங்கிய ‘பிரிக்ஸ் சிம்பொனி’ இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இரவு விருந்தில் ஜின்பிங் பங்கேற்கவில்லை

இதற்கிடையே, பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவில் முன்னேற்றம் காண ஒப்புக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை.

அவர் ஓட்டலுக்கு ஓய்வெடுக்கச் சென்றதாக கூறப்பட்டது. அதேபோல், உச்சி மாநாட்டில் பங்கேற்ற அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது தாயகம் திரும்பியதால் அவரும் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

ஜின்பிங் விருந்தில் பங்கேற்காதது மாநாட்டு வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

7 நாட்டு தலைவர்களுடன் மோடி ஆலோசனை

மாநாட்டின் 2-வது நாளான இன்று, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி 7 நாடுகளின் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி, கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், புருண்டி அதிபர் எவரிஸ்ட் நடாயிஷிமியே, உகாண்டா துணை அதிபர் ஜெசிகா அலுபோ மற்றும் நைஜீரியா துணை அதிபர் காசிம் ஷெட்டிமா ஆகியோருடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

இந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கம் சர்வதேச பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டின் 2-வது நாளில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த தொடர் பேச்சுவார்த்தைகள் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பிரிக்ஸ் அமைப்பில் பாகிஸ்தான் சேர்வதற்கு தடையா? இந்தியாவின் எதிர்ப்பால் நீடிக்கும் சிக்கல்!

MUST READ