சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில பயணியை, ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முண்டியடித்த பயணிகள்: சென்னையில் இருந்து அசாம் மாநிலம் சில்காட் டவுன் வரை செல்லும் நாகூன் எக்ஸ்பிரஸ் (Nagaoon Express) சிறப்பு ரயில் தாம்பரம் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. இது சிறப்பு ரயில் என்பதால், வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் ரயிலில் ஏற கடும் கூட்ட நெரிசலுடன் முண்டியடித்தனர்.
துரித மீட்பு நடவடிக்கை: ரயில் மெதுவாக நகரத் தொடங்கிய நிலையிலும் சிலர் அதில் ஏற முயன்றனர். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால்தவறி கீழே விழுந்தார். நொடிப்பொழுதில் அவர் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையிலான இடைவெளியில் சிக்கி அடியில் செல்ல இருந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை (RPF) போலீசார், சற்றும் யோசிக்காமல் உடனடியாகப் பாய்ந்து சென்று அந்த நபரை பிளாட்பாரத்திற்கு இழுத்து பத்திரமாக மீட்டனர்.
குவியும் பாராட்டுக்கள்: உயிர் தப்பிய அந்த பயணிக்கு முதலுதவி மற்றும் உரிய அறிவுரைகளை வழங்கி RPF போலீசார் அனுப்பி வைத்தனர். சமயோசிதமாக செயல்பட்டு, கணப்பொழுதில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் இந்த வீரமிக்க செயலுக்கு சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
