தமிழகத்தில் நிலவி வரும் மின் தேவையைச் சமாளிக்கவும், வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தெரிவித்த முக்கியத் தகவல்கள்:

மின் தேவையும் கூடுதல் கொள்முதலும்
தேவை அதிகரிப்பு: செப்டம்பர் மாதத்தில் வழக்கமாகக் காற்றாலை மின் உற்பத்தி குறையும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,000 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, தற்போது 19,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
3,500 மெகாவாட் கொள்முதல்: கடந்த வாரம் பொதுத் தொகுப்பிலிருந்து 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 1,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்டு நிலைமை முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிரமமின்மை: பிற மாநிலங்கள் மின்சாரச் சந்தை விலை அதிகமாக இருக்கும்போது மின்வெட்டு (Load shedding) செய்யும் சூழலில், தமிழக அரசு ஒரு யூனிட் ரூ.20-க்கு மேல் இருந்தாலும் சந்தை விலையில் மின்சாரத்தைச் வாங்கி விநியோகித்து வருகிறது. எதிர்காலத்தில் நீண்ட கால ஒப்பந்தங்கள் (Long-term agreements) மூலம் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய பேட்டரி கொள்கை & சோலார் திட்டம்
பேட்டரி சேமிப்பு கொள்கை: இரவு நேர உச்ச மின் தேவையை (Peak Hours) சமாளிக்க, புதிய பேட்டரி சேமிப்பு கொள்கை அடுத்த வாரத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும்.
ஒற்றைச் சாளர சோலார் திட்டம்: மத்திய, மாநில அரசுகளின் மானியங்களை ஒருங்கிணைத்து வீட்டு உபயோக சோலார் திட்டங்களை எளிமைப்படுத்தும் ஒற்றைச் சாளர இணையதளம் அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை & பேரிடர் மேலாண்மை
தனிப் பிரிவு அமைப்பு: பருவமழைக் காலத்தில் ஏற்படும் மின்தடைகளைச் சீரமைக்க, வரலாற்றிலேயே முதன்முறையாகக் கண்காணிப்புப் பொறியாளர் (SE) தலைமையில் பேரிடர் மேலாண்மைக்கென தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
தளவாடங்கள் தயார்: புயல் போன்ற அவசர காலங்களை எதிர்கொள்ள 1.5 லட்சம் மின்கம்பங்கள் மற்றும் தேவையான உதிரிபாகங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 நாட்களில் மீட்புக் குழுவினரின் மாதிரிப் பயிற்சிகள் தொடங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகள்: ‘மின்னகம்’ மற்றும் சமூக வலைதளப் புகார்களைக் கண்காணிக்க ஏஐ (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் சேவை மையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் புகார்களின் நிலையை மொபைல் மூலமே கண்காணிக்கும் வசதியும் செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஆ.ராசாவின் கருத்து குறித்து
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர்:
எந்தவொரு கேள்விக்கு உரிய பதில் இல்லையோ, அப்போது அவர்களின் கடைசி ஆயுதம் ஆபாசமாகவே இருக்கிறது. வரலாற்று நிகழ்வுகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய விளக்கங்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
