செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழக முதலமைச்சர் மு.ஜோசப் விஜய் அவர்களின் தோற்றத்தில் போலியான ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோவை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரைத் தமிழக சிபி-சிஐடி சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


சிக்கியது எப்படி?
தமிழகத்தில் இணையவழி குற்றங்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தபோது, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.ஜோசப் விஜய்யின் அச்சு அசலான உருவத்துடன், இந்தி பின்னணிக் குரல் (Voiceover) கொண்ட வீடியோக்கள் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீடியோவில், “அரசு சார்பில் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்; அதைப் பெற குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்” என மோசடி வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் செப்டம்பர் 1-ஆம் தேதி சிபி-சிஐடி சைபர் கிரைப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ராஜஸ்தானில் பாய்ந்த தனிப்படை!
தொழில்நுட்ப ரீதியான சோதனையில், இந்த மோசடியின் பின்னணியில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஷயாபு கான் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக காவல்துறையின் இரு தனிப்படைப் பிரிவினர் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு விரைந்தனர்.
ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் அல்வாரில் பதுங்கியிருந்த ஷயாபு கானை செப்டம்பர் 12 அன்று தனிப்படையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட:
செல்போன்கள்
சிம் கார்டுகள்
சிபியு (CPU)
ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை அழைத்து வரப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
பாகிஸ்தான் கணக்குகளுடன் தொடர்பா?
முதற்கட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பலரும் இந்த டீப்ஃபேக் வீடியோவை நம்பி பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இது போன்ற போலியான வீடியோக்கள் பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகள் மூலமாகவும் பரப்பப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஷயாபு கான் தனியாகச் செயல்பட்டாரா அல்லது இதன் பின்னணியில் சர்வதேச அளவிலான பெரிய குற்றக் கும்பல் உள்ளதா என்பது குறித்து சிபி-சிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!
சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற போலியான நிதியுதவி அறிவிப்புகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், முன்பின் தெரியாத நபர்களிடம் தங்களது வங்கி விவரங்களையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
அண்ணா பிறந்தநாளில் ஆச்சரியம்! ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த திமுக – அதிமுக நிர்வாகிகள்
