தாம்பரம் மாநகராட்சியில் அசோகா தூண் சிலை நிறுவிய விவகாரத்தில், ஆணையர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதையும், உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையும் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் ‘அறப்போர் இயக்கம்’, இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அரசு இந்த விவகாரத்தை ஒரு “செயல்முறை குறைபாடு” என்று எளிதில் கடந்து செல்லப் பார்ப்பதை ஏற்க முடியாது என எச்சரித்துள்ளது.
அறப்போர் இயக்கம் எழுப்பும் 9 முக்கிய கேள்விகள்:
அரசு தரப்பு வாதங்களை முன்வைத்து, அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள அதிரடி கேள்விகள்:

மாமன்றக் கூட்டத் தேதி முரண்பாடு: ஜூலை 14-ஆம் தேதி மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், ஜூன் 11-க்குப் பிறகு ஜூலை மாதம் மாமன்றக் கூட்டம் நடக்கவே இல்லை என்றும், ஆகஸ்ட் 30-ஆம் தேதிதான் கூட்டம் நடந்ததாகவும் தெரியவருகிறதே, அப்படியானால் இந்த அனுமதி எப்போது பெறப்பட்டது?
மர்மமான நிறுவனம்: ஜூலை 23 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியான பிறகு, ஜூலை 24 அன்று CSR (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிதியிலிருந்து இந்தப் பணிகளைச் செய்வதாகக் கடிதம் கொடுத்த அந்த மர்ம நிறுவனம் எது? அதன் பெயர் என்ன?
வேகமான ஒப்புதலும் சாதனையும்: அந்த நிறுவனத்திற்குத் தாம்பரம் மாநகராட்சி எப்போது ஒப்புதல் கடிதம் வழங்கியது? உடனடியாக ஜூலை 25-ல் கடிதம் கொடுத்திருந்தாலும் கூட, அடுத்த மூன்றே நாட்களில் அதாவது ஜூலை 29-க்குள் எப்படி அந்த அசோகா தூண் சிலையைத் தயாரித்து நிறுவ முடிந்தது?
விளம்பரமில்லா பாரிவள்ளல்: CSR நிதியில் சிலையை நிறுவியதாகக் கூறப்படும் அந்த நிறுவனம், எங்குமே தனது பெயரையோ விளம்பரத்தையோ பதிவிடவில்லையே, அந்தப் பாரிவள்ளல் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாமா?
டெண்டர் ரத்து செய்யப்பட்டதின் பின்னணி: சிலை அமைக்கப்பட்ட பிறகு ஆகஸ்ட் 6 அன்று டெண்டர் கோரியது “செயல்முறை குறைபாடு” மட்டுமே என்று அரசு எப்படி முன்கூட்டியே முடிவுக்கு வந்தது? அறப்போர் இயக்கம் புகார் அளிப்பதற்கு முன்பாக ஏன் அந்த டெண்டர் ரத்து செய்யப்படவில்லை? நாங்கள் புகார் அளித்த பின்னர்தானே (செப். 15 அன்று பாலச்சந்தர் ஐ.ஏ.எஸ். மூலமாக) டெண்டர் ரத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது? செப்டம்பர் 24 வரை ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றதாக ஆவணங்கள் கூறுவதைப் பார்க்கும்போது, புகார் அளிக்கப்படாவிட்டால் பில் தொகை வழங்கப்பட்டு மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லையா?
பணி ஆணை குறித்த சந்தேகம்: பணி ஆணை வழங்கப்படவில்லை என அரசு எதன் அடிப்படையில் கூறுகிறது? புகார் கொடுத்த பின்னர்தான் பணி ஆணை கிழித்துப் போடப்பட்டதா அல்லது வழங்கப்படவே இல்லையா என்பது முறையான விசாரணையில்தானே வெளிப்பட வேண்டும்?
முன் தேதியிட்ட கடிதமா?: கூறப்படும் CSR நிதி என்பது உண்மையானதா அல்லது நேற்று முன் தேதியிட்டு அந்த நிறுவனத்திடம் கடிதம் வாங்கி இடையில் சொருகப்பட்டதா என்பதை விரிவான விசாரணை மூலமல்லவா கண்டறிய வேண்டும்?
இரட்டை முறைகேடு சந்தேகங்கள்: CSR நிதி மூலம் வேலை முடிந்த பிறகு, எதற்காக டெண்டர் கோரப்பட்டு நேற்றைய தினம் வரை அது ரத்து செய்யப்படாமல் இருந்தது? ஏற்கனவே வேறு நிறுவனம் செய்து முடித்த வேலைக்கு டெண்டர் போட்டு, இரண்டு முறை கணக்கு காட்டி ரூ.45 லட்சத்தை முறைகேடு செய்யத் திட்டமிடப்பட்டதா?
நடவடிக்கை தொடருமா அல்லது மூடி மறைக்கப்படுமா?: இந்த ஒட்டுமொத்த முறைகேட்டையும் வெறும் ‘செயல்முறை குறைபாடு’ என்று கூறி சுருக்கிவிட முயல்வது கண்டனத்திற்குரியது. காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரிகளுக்குச் சில காலம் கழித்து மீண்டும் வேறு பதவி வழங்கிவிட்டு வழக்கை முடித்துவிடுவீர்களா அல்லது இதில் தொடர்புடைய உண்மையான விதிமீறல்கள் மீது உரிய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
அறப்போர் இயக்கத்தின் இந்த அதிரடி அறிக்கை மற்றும் விடுக்கப்பட்டுள்ள தொடர் கேள்விகள் தாம்பரம் மாநகராட்சி வட்டாரத்தில் மற்றும் அரசியல் களத்தில் மீண்டும் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 153 சவரன் நகை மோசடி: தவெக உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் கைது!
