நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பட்டினப்பாக்கத்தில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகம், ஓமந்தூரார் வளாகம், கச்சத்தீவு, மக்கள் போராட்டங்கள், மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு, வெளிநாட்டு முதலீடுகள், இடைத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
![]()

“புதிய தலைமைச் செயலகம் கட்ட விடப்போவதில்லை”
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருக்கும் என்றும், அது நடைமுறைக்கு வரப்போவதில்லை என்றும் சீமான் கூறினார். “கட்டப் போவதுமில்லை, கட்ட விடப்போவதும் இல்லை” என அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடம் தேவைப்படுவதாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், ஏற்கனவே உள்ள கட்டிடத்திற்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஓமந்தூரார் வளாகத்தை மீண்டும் பயன்படுத்தலாம்”
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டதாகவும், பின்னர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அது அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டதாகவும் சீமான் கூறினார்.
தற்போது புதிய தலைமைச் செயலகத்திற்கு நவீன வசதிகள் தேவைப்படுவதாகக் கூறும் அரசியல் கட்சிகள், அப்போது அந்தக் கட்டிடத்தை தலைமைச் செயலகமாகத் தொடர வேண்டும் என்று ஏன் வலியுறுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஓமந்தூரார் வளாகத்தில் ஏற்கனவே தலைமைச் செயலகம் செயல்பட்டுள்ளதால், தேவைப்பட்டால் அந்தக் கட்டிடத்தைச் சீரமைத்து மீண்டும் பயன்படுத்தலாம் என்றும், மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் சீமான் தெரிவித்தார்.
“மக்களின் வாழ்விடங்களை அகற்ற வேண்டிய தேவை என்ன?”
சென்னையே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மாநகரமாக இருக்கும் நிலையில், மக்களின் வாழ்விடங்களை அகற்றி புதிய கட்டிடத்தை அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
மேகமலை மற்றும் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருவதாகக் கூறிய அவர், அந்தப் பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் தங்களது வாழ்விடத்தை விட்டு வெளியேற்ற வேண்டாம் என போராடி வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கச்சத்தீவு விவகாரம்
கச்சத்தீவு தொடர்பாகவும் கேள்வி எழுப்பிய சீமான், “யாரைக் கேட்டு கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தீர்கள்?” என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு ஏதேனும் கோரிக்கை வைத்தால் அதற்கு எதிராக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“ரூ.1,200 கோடியில் புதிய கட்டிடம் ஏன்?”
தமிழ்நாட்டிற்கு கடன் சுமை இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் வாங்கி வட்டி செலுத்தும் சூழலில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிடம் எதற்காக தேவைப்படுகிறது என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே உள்ள தலைமைச் செயலகத்திலிருந்தே பல்வேறு ஆட்சிகள் செயல்பட்டு, பல திட்டங்களும் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அதே இடத்திலிருந்து அரசு பணிகளைத் தொடரலாம் என்றார்.
மேலும், “ஆயிரம் ரூபாய்க்கு திமுக கொடுத்தால் நாங்கள் 2,500 ரூபாய் கொடுக்கிறோம் என்பது மாற்றமா? எடப்பாடி பழனிசாமி மூன்று சிலிண்டர் கொடுத்ததாகக் கூறினார். நீங்கள் ஆறு சிலிண்டர் கொடுப்பதாகக் கூறினீர்கள். இதெல்லாம் மாற்றமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் போராட்டங்கள் குறித்து சீமான்
மேகமலை பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் என்ன பேசப்பட்டது என்றும், மாஞ்சோலை பிரச்சினை தற்போது விவாதிக்கப்படுகிறதா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
மேகமலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் போராடி வருவதாகவும், பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் தங்களது வாழ்விடத்தைப் பாதுகாக்க போராடி வருவதாகவும் கூறிய அவர், இத்தகைய பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
விஜய் சேதுபதி கருத்து குறித்து சீமான்
நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், அது கடந்த கால ஆட்சியாளர்களையோ அல்லது குறிப்பிட்ட ஆட்சியையோ சார்ந்த கருத்து அல்ல என்றும், ஒரு தனியார் நிகழ்ச்சியில் பொதுவாக தெரிவிக்கப்பட்ட கருத்து என்றும் கூறினார்.
அந்தக் கருத்தை தன்னுடனோ அல்லது பிறருடனோ பொருத்திப் பார்த்து பிரச்சினை செய்வது அவசியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து கருத்து
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருவது என்ற திட்டத்திற்கு தான் எதிரானவர் என்றும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் சீமான் கூறினார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு பல லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாகக் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தனது நிலைப்பாட்டையும் தெரிவித்தார்.
மின் கட்டணம், சொத்து வரி உயர்வு குறித்து
மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்த்தப்படுவதாகக் கூறிய சீமான், இதனால் பாதிக்கப்படும் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினால்தான் அது கவனிக்கப்படும் என்றார்.
மக்கள் தொடர்ந்து சகித்துக்கொண்டிருப்பதால் இதுகுறித்து பேசுவதால் மட்டும் பயனில்லை என்றும், பாதிக்கப்படும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இடைத்தேர்தல் குறித்து சீமான்
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை அங்கு வந்து பார்க்கலாம் என்று கூறிய சீமான், இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதாக எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், இந்த முடிவை இடதுசாரிகள் முன்பே எடுத்திருந்தால், அவர்கள் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஆதரித்திருக்கும் என்றும், தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க மாட்டோம் என்றும் கூறினார்.
“பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்”
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சீமான் கேள்வி எழுப்பினார்.
மக்கள் வழங்கிய பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் என்ன என்றும், பின்னர் வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இடையில் என்ன நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இடைத்தேர்தலுக்காக செலவிடப்படும் பணம் மக்கள் பணம் என்றும், தேர்தல் செலவு மக்கள் பணத்தை வீணடிப்பதாக மாறக்கூடாது என்றும் அவர் கூறினார்.
“இடைத்தேர்தல் செலவை சம்பந்தப்பட்டவர்களே ஏற்க வேண்டும்”
பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட காலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக ஏற்படும் முழுச் செலவையும் சம்பந்தப்பட்டவர்களே ஏற்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.
பதவிக்காக ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுபவர்களுக்கு இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், “பதவிக்காக அங்கு இங்கு ஓடுபவர்களுக்கு இடைத்தேர்தலில் மக்கள் மிகச் சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றும் சீமான் தெரிவித்தார்.
