இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, பதிவு செய்யப்பட்ட ஆனால் எந்தவொரு தேசிய அல்லது மாநிலக் கட்சியாகவும் அங்கீகாரம் பெறாத ‘நிழல் கட்சிகள்’ (Unrecognised Political Parties) மூலம் சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான ஆர். மணி பகீர் உண்மைகளை வெளியிட்டுள்ளார். தேர்தல் களத்தில் வெறும் பெயரளவுக்கு மட்டுமே இயங்கும் இந்த நிறுவனங்கள், தேர்தல்களை மையமாகக் கொண்டு அரங்கேற்றியுள்ள இந்த மெகா ஊழல் இந்திய ஜனநாயகத்தின் மீதான பேரிடியாக மாறியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஃப்ளாஷ்பேக்: டப்பா கட்சிகளும், ஆயிரக்கணக்கில் விழும் நூறு கோடி டொனேஷன்களும்!
வழக்கமாக சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்கு ஷெல் கம்பெனிகள் (Shell Companies) பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம்; ஆனால், தற்போது அரசியல் கட்சிகளையே இதற்காகப் பயன்படுத்தி வருவதுதான் உச்சக்கட்ட அட்டூழயமாகும். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு, தேர்தலில் வெறும் சில நூறு வாக்குகளை மட்டும் பெறும் இந்தக் கட்சிகளுக்குப் பின்னால் பல நூறு கோடி ரூபாய் நன்கொடைகள் வந்து குவிகின்றன.

இதற்குச் சான்றாக, 2024 மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் வெறும் 3 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 8,542 வாக்குகளை மட்டுமே பெற்ற ‘நியூ இந்தியா யுனைட்டட் பார்ட்டி’ (New India United Party) என்ற கட்சிக்கு, ஒரே ஆண்டில் 290 கோடி ரூபாய் வரை நன்கொடையாக வந்து குவிந்துள்ளது. ஆனால், அந்த முகவரியில் சென்று பார்த்தால் பெயர்ப் பலகையைத் தாண்டி ஆளே இல்லை என்பது இந்த மோசடியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
லவுட் ஸ்பீக்கர் முதல் துப்பட்டா வரை: கணக்கு காட்டும் விஞ்ஞானத் திருட்டு!
இந்த டப்பா கட்சிகள் தாங்கள் செலவழித்ததாகக் காட்டும் கணக்குகளும் பெரும் வியப்பளிக்கின்றன. வெறும் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறப்படும் இந்தக் கட்சிகள் காட்டியுள்ள செலவின விவரங்கள் பின்வருமாறு:
பேனர்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களுக்கு: ரூ.26 கோடி
லவுட் ஸ்பீக்கருக்கு: ரூ.20 கோடி
ஜெண்டா மற்றும் துப்பட்டாக்களுக்கு: ரூ.20 கோடி
பிரச்சார செலவுகளுக்கு: ரூ.92 கோடி
என கோடிக்கணக்கில் செலவழித்ததாகக் கணக்கு காட்டியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செலவின வரம்புகளைத் தாண்டி, இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பதற்கான எந்த முறையான பதிலும் யாரிடமும் இல்லை.

பினாமி பணமும், எதிர்க்கட்சிகளை உடைக்கும் அரசியல் விளையாட்டும்!
இந்த முறைகேடுகளுக்குப் பின்னால் ஆளுங்கட்சியின் நேரடி ஆசீர்வாதம் இருப்பதாக விமர்சகர் ஆர். மணி குற்றம்சாட்டுகிறார். எதிர்க்கட்சிகளுக்குத் தொழிலதிபர்கள் நன்கொடை வழங்க முடியாதவாறு அமலாக்கத்துறை (ED) மற்றும் வருமான வரித்துறை மூலம் கடும் மிரட்டல்கள் விடுக்கப்படும் சூழலில், இந்த நிழல் கட்சிகளுக்கு மட்டும் தடாலடியாகக் கோடிக்கணக்கில் பணம் வந்து விழுவது எப்படி சாத்தியம்?
இங்கு திரட்டப்படும் கறுப்புப் பணம்தான், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது எதிர்க்கட்சிகளை உடைக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவும், 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசவும் பயன்படுத்தப்படுகிறது. தேசியக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வாங்கிய தேர்தல் நிதியை விட, இந்தச் சில ‘டுபாகூர்’ கட்சிகள் மட்டும் வாங்கிய நிதி பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுடுகாடாகும் ஜனநாயகம்: மௌனம் காக்கும் அமைப்புகள்!
பிரதமரின் ‘பி.எம். கேர்ஸ்’ நிதி தொடங்கி எலக்ட்ோரல் பாண்ட் முறைகேடுகள் வரை, கடந்த 10 ஆண்டுகளில் அரங்கேறியுள்ள ஊழல்கள் உலக நவீன வரலாற்றிலேயே மிகப்பெரியது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஜனநாயகத்தின் தூண்களாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது இந்தியாவை ஒரு அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
இவ்வளவு பெரிய பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய சி.பி.ஐ, ஈ.டி மற்றும் டி.ஆர்.ஐ (DRI) போன்ற புலனாய்வு அமைப்புகள் ஆளுங்கட்சியின் நிழலில் செயல்படுவதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சி மட்டுமே இது குறித்து நாடாளுமன்றத்தில் கூட்டுக் நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு (JPC) குரல் கொடுத்து வந்தாலும், மற்ற கட்சிகளிடமிருந்து இன்னும் ஒருங்கிணைந்த எதிர்ப்பு வராதது இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. நீதித்துறையும் அரசு இயந்திரங்களும் ஒரே திசையை நோக்கிச் சுருங்கி வரும் இந்த அபாயகரமான சூழலில், சிவில் சமூகமும் பொதுமக்களும் விழித்தெழுந்து கேள்வி கேட்காவிட்டால், இந்திய ஜனநாயகம் தனது இறுதி மூச்சை விடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் அச்சுறுத்தும் எச்சரிக்கையாக உள்ளது.
