காலக்கெடு நிர்ணயம்:
இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக முடித்து தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரமாணப் பத்திரம் தாக்கல்:
2025ஆம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை விளக்கிப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு:
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நவம்பர் 12ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தரப்பு வாதம்:
ஆவணங்கள் மீது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) முடிவெடுத்தவுடன், வழக்குத் தொடர்வதற்கான இறுதி அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்திற்கே (PMO) உண்டு என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவானச் செய்தி:
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், சம்மந்தப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி கோருவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பான வழக்கு நீதிபதி N. ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கச் சட்டப்பூர்வமான அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்தனர்.
மாநில அரவிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) கருத்துகளுக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
வழக்குகளை விரைந்து விசாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கும் அனைத்து நடைமுறைகளையும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடித்துத் தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், கடந்த 2025 நவம்பர் முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவானப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
