Homeசெய்திகள்தமிழ்நாடு"உங்களுடன் சிரித்துப் பேசுவதுதான் கூட்டணியில் தொடர்வதற்கான ஒப்பந்தமா?" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் காங்கிரசார் அனல் பறக்கும்...

“உங்களுடன் சிரித்துப் பேசுவதுதான் கூட்டணியில் தொடர்வதற்கான ஒப்பந்தமா?” – செல்வப்பெருந்தகை விவகாரத்தில் காங்கிரசார் அனல் பறக்கும் கேள்வி!

-

- Advertisement -

தமிழக அரசியலில் கூட்டணி குறித்த விவாதங்களும், காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான விமர்சனங்களும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. தன்னை விமர்சிப்பவர்களை நோக்கி, “என் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்” என்று காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."உங்களுடன் சிரித்துப் பேசுவதுதான் கூட்டணியில் தொடர்வதற்கான ஒப்பந்தமா?" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் காங்கிரசார் அனல் பறக்கும் கேள்வி!

மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சி

“கூட்டணி பற்றிப் பேச செல்வப்பெருந்தகை யார்?” என்று கேள்வி எழுப்பும் நபர்களைச் சாடியுள்ள அந்தத் தொண்டர், வடமாநிலத்தில் ராகுல் காந்தி சென்ற பிறகு அவர் இருந்த மேடையைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்த அதே அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே தற்போதைய இந்தக் கேள்விகளும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

we-r-hiring

மேலும், “மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு?” என்பதே தனது அடிப்படைக் கேள்வி என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சிரித்துப் பேசியது ஒப்பந்தமா? – அடுக்கடுக்கான கேள்விகள்

அறிவுஜீவி என்று கூறிக்கொள்வோர் சிலர், முதல்வர் தங்களது தலைவருடன் நீண்ட நேரம் சிரித்துப் பேசினார் என்று நியாயம் கற்பிப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “உங்களுடன் நீண்ட நேரம் சிரித்துப் பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து அவர் எழுப்பிய முக்கியக் கேள்விகள்:

  • முதல்வராவது அல்லது அந்தக் கட்சியில் உள்ள முன்னணிப் பொறுப்பில் உள்ளவர்களில் யாராவது ஒருவர், “ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்” என்று ஒரே ஒரு முறை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் பிரச்சினை தீர்ந்ததே! ஏன் சொல்ல மறுக்கிறார்கள்?

  • நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம், “நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான்” என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி, அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? அப்படித் தந்திருந்தால் அதையாவது சொல்லலாமே!

  • பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே? அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?

சுயமரியாதைக் காங்கிரஸ் தொண்டனின் எச்சரிக்கை

“உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்” என்று குறிப்பிட்டுள்ள அவர், காலம் பலரை முன்னிறுத்தும், பலரை மறந்தும் போகும்; ஆனால் நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும் என்றார்.

“காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது; பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது. தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு, என் தலைவர் திரு. ராகுல் காந்திதான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர்கள் என்னை யார் என்று கேட்கிறார்கள். உரக்கச் சொல்கிறேன்; நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன்; சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி” என்று தனது அறிக்கையை அவர் ஆவேசமாக நிறைவு செய்துள்ளார்.

தாராபுரம் தவெக தேர்தல் பிரச்சாரம்: ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு!

MUST READ