இந்தியா மற்றும் பாகிஸ்தான் கடற்படை பிரிவுகளுக்கு இடையே சர்வதேச கடற்பரப்பில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானின் சார்ஜ் டி அஃபயர்ஸ் அதிகாரியை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.


கடற்படை கப்பல்கள் மோதல்
வடக்கு அரபிக்கடல் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ஒன்றுக்கும் பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்றுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தூதருக்கு சம்மன்
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் சார்ஜ் டி அஃபயர்ஸ் அதிகாரியை புது டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் அழைத்தது. பாகிஸ்தான் கடற்படை பிரிவுகளின் நடவடிக்கை “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தொழில்முறைத் தரத்துக்கு மாறானது” என இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையே 1991-ம் ஆண்டு கையெழுத்தான ராணுவப் பயிற்சிகள், நடவடிக்கைகள் மற்றும் படையினர் நகர்வுகள் தொடர்பான முன்கூட்டிய தகவல் அளிக்கும் ஒப்பந்தத்தின் 10-வது பிரிவுக்கு பாகிஸ்தான் கடற்படை கப்பலின் நடவடிக்கை முரணாக இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது
பாகிஸ்தான் கடற்படை உள்ளிட்ட அனைத்து ராணுவப் பிரிவுகளும் உரிய எச்சரிக்கையுடன் செயல்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்த விதிகளை மதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய சார்ஜ் டி அஃபயர்ஸுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதே விவகாரம் தொடர்பாக எதிர்ப்பை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கடற்படை கப்பல்கள் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக ரீதியான நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
