இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 93 உறுப்பினர்கள் ஒப்பந்தத்துக்கு ஆதரவாகவும், 29 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.


பெரும்பான்மை ஆதரவு
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆளும் தேசிய கட்சியுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. இதன் மூலம் இந்தியா–நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கான முக்கிய சட்ட நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளது.
இந்தியப் பொருட்களுக்கு வரியில்லா சந்தை
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 100 சதவீத பொருட்களுக்கும் வரியில்லா சந்தை அணுகல் வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவின் மட்பாண்டங்கள், தரைவிரிப்புகள், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட சில முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு நியூசிலாந்து 10 சதவீதம் வரை இறக்குமதி வரி விதித்து வந்தது. புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் இந்த வர்த்தகச் சூழலில் மாற்றம் ஏற்படும்.
நியூசிலாந்து பொருட்களுக்கும் வரிச்சலுகை
மறுபுறம், நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்திற்கு வரிகள் முழுமையாகவோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிலோ குறைக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே நியூசிலாந்தின் 57 சதவீத ஏற்றுமதிகளுக்கு வரியில்லா அணுகல் கிடைக்கும் என அந்நாட்டு வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
15 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் முதலீடு
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறுதியளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தை அதிகரிப்பதுடன், முதலீடுகளையும் ஊக்குவிப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், நாடாளுமன்ற ஒப்புதலை வரவேற்று, இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தைக்கான அணுகல் நியூசிலாந்து நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டம் என்ன?
நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இரு நாடுகளும் உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்ததும் ஒப்பந்தம் அமலுக்கு வரும். அடுத்த மாதம் இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் தேதியில் ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவில் மறைந்திருந்த 400 கோடி ஆண்டு பழமையான பிரம்மாண்ட பள்ளம்! அகமதாபாத் விஞ்ஞானிகள் சாதனை
