Homeசெய்திகள்இந்தியாசுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்! – பிரதமர் மோடி பெருமிதம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்! – பிரதமர் மோடி பெருமிதம்

-

- Advertisement -

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா கடந்த 12 ஆண்டுகளில் அசாதாரணமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரிஸ் காலநிலை மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே நிறைவேற்றிய ஒரே ஜி20 நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

சுற்றுச்சூழல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர்

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை இயக்கவியல் எதிர்காலம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச மாநாடு புதுடெல்லி விஞ்ஞான் பவனில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் இந்தியா பல நூற்றாண்டுகளாக உலகுக்கு வழிகாட்டி வருவதாக தெரிவித்தார். நவீன கால காலநிலை சவால்களுக்கு இந்தியாவின் கலாச்சார அனுபவங்களின் அடிப்படையில் தீர்வுகளை வழங்குவதுடன், உலக நாடுகளின் கூட்டு நடவடிக்கைக்கும் இந்தியா அழைப்பு விடுத்து வருவதாக கூறினார்.

தனிநபர் கார்பன் வெளியேற்றம் குறைவு

இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்ற அளவு இன்னும் உலகளாவிய சராசரியில் பாதிக்கும் குறைவாகவே இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

160 ஜிகாவாட்டை கடந்த சூரிய மின் திறன்

12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் சுமார் 2 ஜிகாவாட்டாக இருந்த நிலையில், தற்போது அது 160 ஜிகாவாட்டை கடந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

வீடுகளை சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்களாக மாற்றும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 50 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் கூரை சூரிய மின் தகடுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.80,000 வரை அரசு உதவி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

காற்றாலை, நீர்மின் மற்றும் மின்சார வாகனங்களில் வளர்ச்சி

சூரிய மின்சக்தியைத் தொடர்ந்து பிற தூய எரிசக்தி துறைகளிலும் இந்தியா முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் நாட்டின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், நீர்மின் உற்பத்தித் திறனும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், மின்சார வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 950 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது உலகின் மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் நிபுணர்கள், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 17 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் மற்றும் நீதித்துறை பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சி! ரேணிகுண்டாவில் பரபரப்பு – மின்னழுத்த கம்பியை நெருங்கிய நபர் பத்திரமாக மீட்பு

MUST READ