தமிழக அரசியலில் தற்போது நிலவிவரும் அரசியல் நிலவரங்கள், தவெக அரசின் நடவடிக்கைகள், இடைத்தேர்தல் களங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் தராசு ஷியாம் பல்வேறு கடுமையான விமர்சனங்ளை முன்வைத்துள்ளாா். 
அதிகாரிகளின் ஆதிக்கம் மற்றும் அரசின் அவசர முடிவுகள்
தற்போதைய அரசில் முதலமைச்சர் பல விஷயங்களில் நேரடியாகத் தலையிடாமல், அதிகாரிகள் தங்களின் இஷ்டத்திற்கு முடிவுகளை எடுப்பது மிகப்பெரிய ஆபத்தானது என்று தராசு ஷியாம் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “கடந்த காலங்களில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், 1979-இல் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்திலும் அதிகாரிகள் எடுத்த சில தவறான முடிவுகள் ஆட்சியிற்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்றுதான் தவெக அரசிலும் மேல்மா நில விவகாரம் மற்றும் பட்டினப்பாக்கம் திட்டம் போன்ற விஷயங்களில் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு, பின்னர் வாபஸ் பெறப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆட்சியின் அனுபவக் குறைவையும், அதிகாரிகள் சரியான வழிகாட்டுதலை வழங்கவில்லை என்பதையும் காட்டுகிறது” என்றார்.

இடைத்தேர்தலும் ஜனநாயகச் சீரழிவும்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் குறித்துப் பேசுகையில், “தமிழ்நாடு இதுவரையில் கண்டிராத வகையில் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குதிரைபேர கலாச்சாரத்தை தவெக கொண்டுவந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு மாபெரும் சீர்கேடாகும். மூன்றே மாதங்களில் மீண்டும் ஓட்டு கேட்கும் இத்தகைய கலாச்சாரத்தால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு
இடைத்தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்தது குறித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும் விமர்சித்துள்ள தராசு ஷியாம், “மூன்று மாதங்களுக்கு முன்பு வரை திமுக கூட்டணிக்கு ஆதரவாக நின்றவர்களே இப்போது கம்யூனிஸ்ட் மற்றும் அண்ணா திமுக சார்பில் வேட்பாளர்களாக மாறுவது குழப்பமான நிலையையே உருவாக்குகிறது. பாமகவின் இந்த விலகல் மறைமுகமாக தவெகவிற்குச் சாதகமாக இருக்குமா அல்லது அவர்களின் ஓட்டு வங்கி வேறு பக்கம் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களின் தாக்கம்
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவே அரசியலும், விமர்சனங்களும் மக்களிடம் வேகமாகச் சென்று சேர்கின்றன. முந்தைய காலங்களைப் போல பத்திரிகைகளைப் படித்து கருத்து உருவாக்கும் நிலை மாறி, இன்று அனைவரும் அனைத்துத் தகவல்களையும் உடனடியாகப் பெற்று விவாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இடைத்தேர்தல் களத்தில் மக்களின் மனநிலை எந்த மாதிரியான தீர்ப்பை வழங்கப் போகிறது என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
