தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணிமாறுதலில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இனி காலிப்பணியிடங்கள் மற்றும் நிலைய மூப்பு அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பொதுப் பணிமாறுதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும்.
இந்தக் காலகட்டத்தில் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட்டு, காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் ஊழியர்களின் நிலைய மூப்பு அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்படும்.
மேலும், ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்கள் கட்டாயம் வேறு அலுவலகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்ற புதிய விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல், பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு அவர்கள் தற்போது பணியாற்றி வரும் உள்ளாட்சி அமைப்பிலேயே மீண்டும் பணி நியமனம் வழங்கப்படாது. அதற்குப் பதிலாக வேறு உள்ளாட்சி அமைப்பில் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நடைமுறை மூலம் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரையிலான உள்ளாட்சி அமைப்புகளில் பணிமாறுதல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதுடன், பணியிட ஒதுக்கீட்டில் காலிப்பணியிடங்கள் மற்றும் நிலைய மூப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களில் முறைகேடு? 2013 டெட் தேர்ச்சி பெற்றோர் சரமாரி குற்றச்சாட்டு
