நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் வரும் செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாத இறுதி நாட்களில் வங்கிகள் இயங்குவதில் தடையேற்பட வாய்ப்புள்ளதால், அரசு ஊழியர்களின் ஊதிய விநியோகத்தில் சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கத் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து துறை தலைவர்களுக்கும் அரசின் சுற்றறிக்கை
வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குச் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை இன்றே (செப்டம்பர் 25) வழங்க வேண்டும் என அனைத்துத் துறை தலைவர்களுக்கும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளது.

இதேபோன்று மத்திய அரசு ஊழியர்களுக்கும் இன்றே சம்பளம் வழங்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் எந்தவிதத் தாமதமின்றி உடனடியாகச் சம்பளம் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத இறுதி நாட்களில் பண்டிகைக் காலச் செலவுகளுக்குத் தயாராகி வரும் அரசு ஊழியர்களுக்கு அரசின் இந்த உடனடி நடவடிக்கை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
