நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வேலைநிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.


திடீரென ஒத்திவைக்கப்பட்ட வங்கி வேலைநிறுத்தம்
ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
5 நாள் வங்கி வேலை வாரத்தை அமல்படுத்த வேண்டும், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI) திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் UFBU இடையே செப்டம்பர் 27-ம் தேதி இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பின்னர் வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க UFBU முடிவு செய்தது.
5 நாள் வங்கி வேலை வாரம் குறித்து குழு
வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 5 நாள் வேலை வாரம் தொடர்பாக IBA மற்றும் UFBU பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழு உடனடியாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாக அறிவிப்பது குறித்து இந்தக் குழு பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தும். வாடிக்கையாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தீர்வு காண முயற்சி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PLI திட்டம் குறித்தும் பேச்சுவார்த்தை
Scale IV மற்றும் அதற்கு மேல் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான Performance Linked Incentive (PLI) திட்டம் தொடர்பாகவும் IBA மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் நிலுவையில் இருந்த பிற பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் தொடர்ந்து ஆலோசிக்க உள்ளனர்.
வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி
வேலைநிறுத்தம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டதால், வங்கி வாடிக்கையாளர்கள் முக்கியமான பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு சில வங்கிகள் அறிவுறுத்தியிருந்தன.
மேலும், செப்டம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளை செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது. ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வங்கி கிளைகள், அலுவலகங்கள், ATM இணைப்பு கிளைகள் மற்றும் Currency Chests செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தற்போது வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த 3 நாள் வங்கி வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய இடையூறு தவிர்க்கப்பட்டுள்ளது. வங்கிகள் வழக்கம்போல் செயல்படுவதால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 60 மணி நேர தொடர் கனமழை! 56 பேர் உயிரிழப்பு – 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!
