உத்தரபிரதேசத்தில் 60 மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளம் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.


1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
கனமழையால் வீடுகள் இடிந்தது, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் மாநிலம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 107 கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீதாபூரில் அதிக உயிரிழப்பு
மழை பாதிப்பில் சீதாபூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் கெரி, பஹ்ரைச் மற்றும் பலராம்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 5 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அயோத்தி மற்றும் கோரக்பூர் மாவட்டங்களில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீடுகள் சேதமடைந்ததில் ஹர்தோய் மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு 272 வீடுகள் சேதமடைந்துள்ளன. சீதாபூரில் 108 வீடுகளும், சந்தோலி மாவட்டத்தில் 75 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
32 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கங்கை, யமுனை, காக்ரா, ராப்தி, கண்டக் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 32 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் லக்னோ உள்ளிட்ட நகரங்களிலும் பல இடங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கனமழையால் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் அதிகனமழை
செப்டம்பர் 25 முதல் 27-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் இயல்பைவிட அதிகளவில் மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் 75 மாவட்டங்களில் 56 மாவட்டங்களில் அதிக மழை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை நிலவரம் காரணமாக அடுத்தடுத்த நாட்களிலும் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக டெராய் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை பாதிப்பால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருவதால், பாதிப்பு எண்ணிக்கை மேலும் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்! குழந்தைகளுக்கு தவறான மருந்து – 5 பேர் ஐசியுவில் அனுமதி!
