மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, தவெக அரசுக்கு ஆதரவு திரட்ட முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் கூட்டுச்சதி செய்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறையில் அளிக்கப்பட்ட புகார் குறித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், சட்டத்துறை இணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் பேசியதாவது:
“திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற கடையநல்லூர் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும், கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரிகளை நேரில் சந்தித்து எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ளனர்.
மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த இவர்கள் இருவரும், முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் கூட்டுச்சதி செய்து தன்னைச் சந்தித்து ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
குதிரை பேரமும், சதித் திட்டமும்:
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு வைகோ வலியுறுத்தியுள்ளதாகவும், தேர்தல் செலவுகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் முழுவதையும் தவெகவே ஏற்றுக்கொள்ளும் என்றும், இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகவும் முதலமைச்சர் விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் தன்னிடம் கூறியதாக வைகோ சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ஏற்கனவே ஆளுநரிடம் இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே நேரடியாகச் சாட்சியங்களுடன் புகாரை அளித்துள்ளனர்.
முதலமைச்சர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்:
ஊழலை முழுமையாக ஒழித்துவிட்டதாக உத்தமர் போல வேடமிடும் முதலமைச்சர் விஜய்யின் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழல் கால்கள்தான். தவெகவின் ஆட்சியே லஞ்சத்தின் மீதுதான் இயங்குகிறது. தனது ஆட்சியைத் தக்கவைக்க சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி, இடைத்தேர்தலைத் திணிப்பதன் மூலம் மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார்கள்.
அரசியல் சுயலாபத்துக்காகவும், கட்சித் தாவலை ஊக்குவிக்கும் வகையிலும் ராஜினாமா செய்யும் முறையைத் முற்றிலும் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பதை எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள்.
எச்சரிக்கை:
அதிகாரிகள் சட்டத்தை மதித்து ஜனநாயகைப் பாதுகாக்க வேண்டும். எந்தவொரு அரசும் வரலாம், போகலாம்; ஆனால் அதிகாரிகள்தான் சட்டப்படி செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை முதல் குற்றவாளியாக (A1) சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், திமுக சட்டத்துறை இதனை உறுதியாக எதிர்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடரும்” என்றார்.
